வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக வழக்கு - சீமான் நேரில் ஆஜராக உத்தரவு

விக்கிரவாண்டி இடைத்தேர்தலின் போது வன்முறையைத் தூண்டும் வகையில் பேசியதாக தொடரப்பட்ட வழக்கில் நேரில் ஆஜராகும் படி நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
2019ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பிரசாரத்தின் போது ராஜீவ் காந்தி குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்ட நிலையில், அவர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இது தொடர்பாக விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வரும் நிலையில், நேரில் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருந்தது. இதனிடையே விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ள வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி உயர்நீதிமன்றத்தில் சீமான் மனு தாக்கல் செய்தார். பிடிவாரண்ட் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த நிலையில், சீமான் நேரில் ஆஜராவதில் இருந்து விலக்களிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. வாரண்டை திரும்பப் பெறக் கோரி விக்கிரவாண்டி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யலாம் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.