சென்னையில் பரபரப்பு: சதுப்பு நிலத்தில் தலைக்குப்புற கவிழ்ந்த அரசு பேருந்து! 15 பயணிகள் படுகாயம்!

 
1

சென்னை அடையாறில் இருந்து தாம்பரம் நோக்கி வழித்தடம் எண் 99 மாநகர அரசுப் பேருந்து பயணிகளுடன் சென்றுக் கொண்டிருந்தது. மதியம் 2 மணியளவில் சோழிங்கநல்லூர் செம்மொழி சாலையில் உள்ள தரைப்பாலம் மேலே ஏறும் பொழுது எதிரே லாரி வந்ததால் பேருந்தின் ஓட்டுநர் சாமிதாஸ் (வயது 40) பேருந்தை சாலையின் இடது புறமாகத் திருப்பி சென்றுள்ளார். அப்போது, அரசுப் பேருந்து எதிர்பாராத விதமாக ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சதுப்பு நிலத்தில் தலைக்குப்புறக் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

விபத்து குறித்து தகவலறிந்து விரைந்து வந்த செம்மஞ்சேரி காவல்துறையினர், பேருந்தில் சிக்கிக் கொண்டிருந்த 20 பயணிகளைப் பத்திரமாக மீட்டனர். இதில் 15 பயணிகள் காயமடைந்தனர். இதையடுத்து ஆறு ஆம்புலன்ஸுகள் வரவழைக்கப்பட்டு காயமடைந்தப் பயணிகள் அனைவரும் அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு மருத்துவர்கள் சிகிச்சை அளித்தனர்.

பின்னர் தீயணைப்புத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கவிழ்ந்துக் கிடந்த அரசுப் பேருந்தை கிரேன்களின் உதவியுடன் சுமார் மூன்று மணி நேரப் போராட்டத்திற்கு பிறகு பத்திரமாக மீட்டனர். விபத்து குறித்து பள்ளிக்கரணை போக்குவரத்து புலனாய்வு பிரிவு காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போக்குவரத்துத்துறை அதிகாரிகளும் விபத்து எப்படி நிகழ்ந்தது? என்பது குறித்து விசாரணையில் இறங்கியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.