சென்னை மாநகராட்சியின் அசத்தல் அறிவிப்பு..! டெலிவரி ஊழியர்களுக்காக இலவச ஏசி ஓய்வறை.!

 
1

உணவு டெலிவரி தொழிலில் லட்சக்கணக்கான இளைஞர்கள் இளம்பெண்கள் பணியாற்றி வருகிறார்கள். இவர்களுக்கு என தனி அலுவலகம், ஓய்வறை என எதுவும் இல்லாத காரணத்தால் சுட்டெரிக்கும் வெயிலிலேயே கால் கடுக்க நிற்க வேண்டிய நிலை உள்ளது.

போக்குவரத்து நெரிசல், வெயில், மழை என்று பல்வேறு சூழ்நிலையிலும் அவர்கள் வேலை செய்கிறார்கள். இதற்கு தீர்வாக பொது இடங்களில் அவர்களுக்கான ஓய்வு வசதிகளுடன் ஓய்வு அறைகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் எழுந்தன.  இதனை கருத்தில் கொண்டு  ஸ்விக்கி, ஜோமேட்டோ உள்ளிட்ட நிறுவனங்கள் 24 மணிநேர உணவு டெலிவரி செய்யும் தொழிலாளர்களுக்காக சென்னை மாநகராட்சி புதிய ஏற்பாடு செய்துள்ளது.

இதன் அடிப்படையில் சோதனை முறையில் சென்னை அண்ணா நகர், நுங்கம்பாக்கம், ராயப்பேட்டை, மயிலாப்பூர், தியாகராய நகர் உள்ளிட்ட பகுதிகளில் ஏ.சி வசதியுடன் ஓய்வு அறைகள் அமைக்கப்படவுள்ளது. 

இந்த புதிய திட்டத்தால் ஆண் ஊழியர்களை விட  பெண் தொழிலாளர்கள் அதிகம் பயனடைவார்கள் எனக் கூறப்படுகிறது.  சென்னை மாநகராட்சி சார்பாக அமைக்கப்பட்டுள்ள சிறிய அளவிலான ஓய்வு அறையில்,கழிவறை, குடிநீர், ஸ்மார்ட்ஃபோன் சார்ஜிங் செய்யும் வசதி, வேகமான இணையதள வசதி உள்ளிட்ட வசதிகள் இந்த அறையில் அமைக்கப்பட வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

உணவு டெலிவரி மற்றும் இ- காமர்ஸ் டெலிவரி தொழிலாளர்களில் தற்போது பெண்களும் அதிகளவில் உள்ளனர். அவர்கள் கழிவறைகளைப் பயன்படுத்துவதற்கே பெரும் சிரமம் அடையும் நிலை உள்ளது. குறிப்பாக உணவு மற்றும் இ- காமர்ஸ் நிறுவனங்களில் டெலிவரி செய்யும் தொழிலாளர்களில் சுமார் 10 சதவீதம் பேர் பெண்களாவர். ஆகவே பெண் தொழிலாளர்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும், அவர்களுக்கு அத்தியாவசிய சேவை வழங்கும் விதமாகவும், ஏசி ஓய்வு அறைகள் அமைக்க சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.