பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் - சென்னை மாநகராட்சி எச்சரிக்கை

 
chennai corporation

சென்னையில் பொது இடங்களில் குப்பை கொட்டினால் அபராதம் விதிக்கப்படும் என சென்னை மாநகராட்சி எச்சரிக்கை விடுத்துள்ளது. 

இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருப்பதாவது:- சென்னை மாநகரை தூய்மையாகவும், அழகுடனும் பராமரிக்க சிங்கார சென்னை 2.0 உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின்கீழ் தூய்மைப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பொது மற்றும் தனியார் இடங்களில் குப்பைகள் மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுபவர்கள் மீது அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. ஏப்ரல் 27-ந்தேதி முதல் மே 11-ந்தேதி வரை பொது இடங்களில் குப்பை கொட்டியவர்களுக்கு ரூ.11 லட்சத்து 55 ஆயிரத்து 90-ம், கட்டுமான கழிவுகளை கொட்டியவர்களுக்கு ரூ.9 லட்சத்து 93 ஆயிரத்து 300 அபராதமும் என மொத்தமாக ரூ.21 லட்சத்து 48 ஆயிரத்து 390 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 

 எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் குப்பை மற்றும் கட்டுமான கழிவுகளை கொட்டுவதை தவிர்த்து சென்னை மாநகராட்சிக்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். மீறும் நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும். பொது இடங்கள் மற்றும் காலி மனைகளில் அதிக குப்பைகள் காணப்பட்டால் சென்னை மாநகராட்சியின் 1913 என்ற உதவி எண்ணில் தொடர்பு கொண்டு பொதுமக்கள் தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.