விதிகளை மீறுவோருக்கு அபராதம் உயர்வு - சென்னை மாநகராட்சி திட்டம்..!

 
chennai corporation chennai corporation

விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது. 

பெருநகர சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மழைநீர் தங்குதடையின்றி செல்லும் வகையில் மழைநீர் வடிகால் பராமரிக்கப்பட்டு வருகிறது. மழைநீர் செல்வதற்காக மட்டுமே அமைக்கப்பட்ட இந்த வடிகால்களில் ஆங்காங்கே சட்ட விரோதமாக கழிவுநீர் இணைப்புகள் இணைக்கப்பட்டுள்ளன.  இதன் காரணமாக மழை காலங்களில் மழைநீர் வெளியேற்றுவதிலும்,   பருவமழை தொடங்கும் முன்னர்  மழைநீர் வடிகால்களை தூர் வாருவதிலும் சிக்கல் ஏற்படுகிறது. அத்துடன் மழைக்காலம் முடிந்த பின் கழிவுநீர் தேங்கி நிற்பதால் கொசுப்புழுக்கள் உற்பத்தியாகும் அபாயமும் ஏற்படுகிறது. 

மழைநீர் வடிகாலில் கழிவுநீர்: ரூ. 5 லட்சம் அபராதம் வசூலிப்பு - சென்னை மாநகராட்சி நடவடிக்கை..

இதனை தடுக்க மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றினால் இணைப்புகள் துண்டிக்கப்பட்டு குடியிருப்பு வாசிகளுக்கு ரூ5 ஆயிரம், நிறுவனங்களுக்கு ரூ25 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டு வருகிறது. எனினும் ஒரு சில இடங்களில் தொடர்ந்து மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றி வரும் புகார்கள் சென்னை மாநகராட்சி கவனத்திற்கு வந்துள்ளது. விதிகளை மீறி மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றும் நிறுவனங்கள் மற்றும் குடியிருப்புகளின் உரிமையாளர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை உயர்த்தி சட்டவிரோத இணைப்புகளை துண்டிக்கும் பணியை தீவிரப்படுத்த சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளது.  மழைநீர் வடிகால்களில் கழிவுநீர் வெளியேற்றுபவர்கள் மீதான அபராத உயர்வு விவரம் விரைவில் வெளியாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.