சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தாதவர்கள் உடனே செலுத்துங்கள் - சென்னை மாநகராட்சி

 
chennai corporation

சென்னையில் சொத்து வரி நிலுவை தொகையை செலுத்தாதவர்கள் உடனே செலுத்துமாறு உரிமையாளர்களுக்கு சென்னை மாநகராட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: சென்னை பெருநகர சென்னை மாநகராட்சியின் பிரதான வருவாயாக சொத்துவரி உள்ளது. இதன் மூலமே மாநகரில் அத்தியாவசிய பணிகளான குப்பை அகற்றுதல், நோய்த்தடுப்பு பணிகள், பூங்காக்கள், சாலைகள், தெருவிளக்குகள், மழைநீர் வடிகால்கள் முதலியவற்றை அமைத்தல் மற்றும் பராமரித்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 2022-23-ம் நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டிற்கான சொத்துவரியை கடந்த 9-ந்தேதி வரையில் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் முழுமையாக செலுத்தி மாநகராட்சியின் அடிப்படை கட்டமைப்பு வளர்ச்சி பணிகளுக்கு பங்களித்துள்ளனர்.

2022-23-ம் நிதியாண்டு வருகிற 31.3.2023 அன்றுடன் நிறைவு பெற உள்ள நிலையில், சுமார் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட சொத்து உரிமையாளர்கள் வரியை செலுத்தாமல் நிலுவை வைத்துள்ளனர். நடப்பு நிதியாண்டு முடிவடைய இன்னும் 18 தினங்கள் மட்டுமே உள்ளது. எனவே சொத்து உரிமையாளர்கள் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி நிலுவைத் தொகையை உடனடியாக செலுத்தி மாநகரின் அடிப்படைக் கட்டமைப்பை மேம்படுத்திட தங்களது பங்களிப்பை அளிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது. இவ்வாறு  தெரிவிக்கப்பட்டுள்ளது