காதலனுடன் தங்கி இருந்த காதலி மர்ம மரணம்! காதலன் தலைமறைவு
சென்னை வளசரவாக்கத்தில் காதலனுடன் தங்கி இருந்த காதலி மர்மமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
வளசரவாக்கம் அடுத்த ராமாபுரத்தில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாடிய குடியிருப்பில் வசித்து வருபவர் மணிகண்டன்(24), சொந்தமாக தொழில் செய்து வருகிறார். இவரை தேனாம்பேட்டையை சேர்ந்த ஸ்ரீஷா(20), என்ற பெண் காதலித்து வந்ததாக கூறப்படுகிறது. இவர் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வந்தார். இந்த நிலையில் கடந்த வாரம் மணிகண்டனுக்கு உடல்நிலை சரியில்லாததால் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவரை ஸ்ரீசா உடனிருந்து கவனித்து வந்துள்ளார். சிகிச்சை முடிந்து வீடு திரும்பிய நிலையில் மணிகண்டனுடன் அவரது தாய் ரேவதி மற்றும் ஸ்ரீசா மூன்று பேரும் ராமாபுரத்தில் உள்ள வீட்டில் வசித்து வந்துள்ளனர்.
இந்த நிலையில் நேற்று அதிகாலை வீட்டின் அறையில் இருந்த போது மின்விசிறியில் ஸ்ரீஷா தூக்கு போட்டு தொங்கியபடி இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்து அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் ஸ்ரீசா இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து ராமாபுரம் போலீசாருக்கு தகவல் தெரிவித்த நிலையில் சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் ஸ்ரீசா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கே. கே. நகரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்ட நிலையில் மணிகண்டன் தனது செல்போனை சுவிட்ச் ஆப் செய்துவிட்டு தலைமறைவாகி விட்டார். இதனால் சந்தேகம் அடைந்த ராமாபுரம் போலீசார் அவரது தாய் ரேவதியிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஸ்ரீசா தற்கொலை செய்து கொண்டாரா அல்லது கொலை செய்யப்பட்டாரா அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா என்ற கோணத்தில் ராமாபுரம் போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். உடல் நலம் பாதிக்கப்பட்ட காதலனை உடனிருந்து கவனித்துக் கொண்ட காதலி திடீரென மர்மமான முறையில் இறந்து போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.