செயின் பறிப்பு சம்பவம் - விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற 2 பேர் கைது!

சென்னையில் ஒரே நேரத்தில் 8க்கும் மேற்பட்டவர்களிடன் செயின் பறித்த இருவர் விமானத்தில் தப்பிச் செல்ல முயன்ற போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
சென்னையில் இன்று காலை ஒரே நேரத்தில் 8க்கும் மேற்பட்டவர்களிடம் செயின் பறிக்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்று காலை 6 மணி முதல் 7 மணி வரை நடந்த சம்பவத்தால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திருவான்மியூர், பெசன்ட் நகர், கிண்டி, சைதாப்பேட்டை, வேளச்சேரி, பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பால் பரபரப்பு ஏற்பட்டது. 25 சவரனுக்கு மேல் நகை பறிப்பால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் காவல் நிலையங்களில் புகார் அளித்த நிலையில் போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார் விமானம் மூலம் தப்பிச்செல்ல முயன்ற இருவரை கைது செய்தனர். சென்னை விமான நிலையத்தில் இண்டிகோ விமானத்தில் தப்பிச்செல்ல முயன்ற உத்தரபிரதேசத்தை சேர்ந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.