சென்னை ஆலந்தூர் சரவண பவன் உணவகம் இடித்து அகற்றம்
சென்னையை அடுத்த ஆலந்தூர் ஜிஎஸ்டி சாலையில் அரசு நிலத்தை ஆக்கிரமித்து செயல்பட்ட சரவண பவன் உணவகம் இடித்து அகற்றப்பட்டது.

செங்கல்பட்டு மாவட்டம் புனிததோமையார் மலை கிராமத்தில் சர்வே எண் 146/2 ல் 15 கிரவுண்ட் அரசு நிலம் குத்தகை காலம் முடிந்து பின்னரும் வணிக ரீதியான கட்டிடம் செயல்பட்டு வந்தது. நிலம் தொடர்பான வழக்கு ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்றத்தில் நடந்த நிலையில், நிலத்தை அரசிடம் ஒப்படைக்குமாறு தீர்ப்பு வந்தது.
இதனையடுத்து செங்கல்பட்டு ஆட்சியர் சினேகா உத்திரவின் பேரில் வட்டாட்சியர்கள் ஆறுமுகம், நடராஜன் ஆகியோர் தலைமையில் வருவாய் துறையினர் கொட்டும் மழையிலும் அரசு நிலத்தில் செயல்பட்ட சரவணபவன் ஒட்டல் ஊழியர்களை வெளியேற்றி, ஓட்டல் பெயர் பலகைகளை அகற்றிய நிலையில் இரண்டு முகப்பு வாயில் முடப்பட்டு சீல் வைக்கப்பட்டது. பின்னர் ஆலந்தூர் உரிமையியல் நீதிமன்ற உத்தரவுப்படி ஆட்சியர் முன்னிலையில் சரவண பவன் உணவக முகப்பு பகுதி இடிக்கப்பட்டது. ஜி.எஸ்.டி சாலை விமான நிலையம் அருகே உள்ள 15 கிரவுண்ட் நிலம் ரூ. 300 கோடி மதிப்புள்ளது என வருவாய்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


