சென்னையில் கனமழை - தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடித்த விமானங்கள்

 
chennai

சென்னையில் பலத்த காற்றுடன் கனமழை பெய்வதால் தரையிறங்க முடியாமல் விமானங்கள் வானில் வட்டமடித்தன. 

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பூமத்திய ரேகையை ஒட்டிய கிழக்கு இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, நேற்று காலை 0830 மணி அளவில், காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றது. நாகைக்கு தெற்கு-தென் கிழக்கு பகுதியில் 630 கிலோ மீட்டர் தூரத்திலும், திரிகோணமலைக்கு தெற்கு-தென்கிழக்கில் 340 கிலோ மீட்டர் தூரத்திலும், புதுச்சேரியில் இருந்து 750 கிலோ மீட்டர் தெற்கு-தென்கிழக்கிலும் நிலைகொண்டுள்ளது. காற்றழுத்த தாழ்வு மண்டலம் 10 கிலோ மீட்டர் வேகத்தில் தமிழகத்தை நெருங்கி வருவதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னையில் காலை 10 மணியில் இருந்து கொட்டித் தீர்த்து வரும் கனமழை காரணமாக கொல்கத்தா, திருவனந்தபுரம், புவனேஸ்வர், மும்பை, ஐதராபாத்தில் இருந்து வந்த விமானங்கள் தரையிறங்க முடியாமல் வானில் வட்டமடிக்கின்றன=. கனமழையால் மும்பை, கோவை, டெல்லி, ஐதராபாத் செல்லும் விமானங்கள் தாமதமாக புறப்படும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. தரையிறங்க முடியாமல் 10 விமானங்கள் வானில் வட்டமடித்து வருகின்றன. மழை, சூறைக்காற்று வேகம் குறைந்த பின் ஒன்றன்பின் ஒன்றாக தரையிறங்க அனுமதிக்கப்படும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.