“அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை கட்டாயம்! இல்லையெனில் நோட்டீஸ்”- சென்னை மேயர் பிரியா

சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம்,தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும் என சென்னை மேயர் பிரியா கூறியுள்ளார்.
பிளாஸ்டிக் பைகளுக்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் "மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை" முன்னெடுக்கும் வகையில் மஞ்சப்பை விற்பனை இயந்திரத்தை சென்னை அரும்பாக்கம் எம்.எம்.டி.ஏ காலணியில் மாநகராட்சி மேயர் பிரியா துவக்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த மாநகராட்சி மேயர் பிரியா, “ சென்னை மாநகராட்சியும் சுற்றுச் சூழலும் இணைந்து மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் பிளாஸ்டிக்கை தவிர்க்குமாறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம். மீண்டும் மஞ்சப்பை இயந்திரத்தை துவக்கி இருக்கிறோம். முதற்கட்டமாக 25 மிஷின்களும் இரண்டாவது கட்டமாக 17 மெஷின்களும் பொருத்தப்பட உள்ளது.
இன்று எம்எம்டிஏ மார்க்கெட் பகுதியில் தானியங்கி இயந்திரத்தை துவக்கியுள்ளோம். தொடர்ந்து ஒவ்வொரு கடைகளிலும் பிளாஸ்டிக் தவிர்க்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஒவ்வொரு பொதுமக்களும் பிளாஸ்டிக் பயன்படுத்துவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். இது ஒவ்வொரு தனி நபரின் முன்னெடுப்பாக இருக்க வேண்டும். நல்ல சமுதாயத்தை அமைக்க வேண்டியது நமது கட்டாயமாக இருக்கிறது. மாநகராட்சி சார்பாக மஞ்சப்பைகள் வழங்க கோரிக்கை வைத்திருக்கிறோம். இந்த மாதத்தில் கடந்த 12 நாட்களில் 108 கிலோ பிளாஸ்டிக் பறிமுதல் செய்யப்பட்டு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னையில் அனைத்து கடைகளிலும் தமிழில் பெயர் பலகை இருப்பது கட்டாயம். இதற்கு 7 நாட்கள் காலக்கெடு வழங்கப்பட்டுள்ளது. மேலும், தமிழில் பெயர் பலகை இல்லாத கடைகளுக்கு நோட்டீஸ் வழங்கி நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார.