"சீஸ், பனீர் பிரியர்களே உஷார்!" – துணிகளை வெளுக்க பயன்படும் ரசாயனத்தை கலந்து போலி சீஸ் தயாரிப்பு..!

 
1

உத்தரப் பிரதேச மாநிலம் ராய்பரேலி அருகே உள்ள அகௌரா (Aghaura) கிராமத்தில், துணிகளை வெளுக்கப் பயன்படுத்தப்படும் 'டினோபால்' (Tinopal) என்ற ஆபத்தான ரசாயனத்தைக் கொண்டு போலி சீஸ் (பனீர்) தயாரித்து வந்த தொழிற்சாலையை உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அகௌரா கிராமத்தில் போலி சீஸ் தயாரிக்கப்படுவதாக கிடைத்த ரகசியத் தகவலின் அடிப்படையில், உணவுப் பாதுகாப்புத் துறை உதவி ஆணையர் மாணிக்சந்த் சிங் தலைமையிலான குழுவினர் அங்கு அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, உணவு பொருட்களில் பயன்படுத்தக் கூடாத, துணிகளுக்கு வெண்மை நிறம் அளிக்க பயன்படும் 'டினோபால்' மற்றும் பிற ரசாயனங்களைக் கலந்து போலி சீஸ் தயாரிக்கப்பட்டு வந்தது அம்பலமானது.

சம்பவ இடத்திலிருந்து பெருமளவில் தயாரிக்கப்பட்ட போலி சீஸ் பறிமுதல் செய்யப்பட்டு அங்கேயே அழிக்கப்பட்டது. மேலும், பரிசோதனைக்காக அவற்றின் மாதிரிகளும் சேகரிக்கப்பட்டன. அகௌரா கிராமத்தைச் சேர்ந்த ஒருவரே இந்தப் போலி தொழிற்சாலையை நடத்தி வந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இங்குத் தயாரிக்கப்படும் போலி சீஸ் ராய்பரேலி மட்டுமின்றி, அண்டை மாவட்டங்களுக்கும் விநியோகிக்கப்பட்டு வந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்தச் சோதனை குறித்துக் காவல் ஆய்வாளர் ஷியாம் குமார் பால் கூறுகையில், லக்னோவிலிருந்து வந்த உணவுப் பாதுகாப்புத் துறைக் குழுவினர் ஆய்வு நடத்தி மாதிரிகளை எடுத்துச் சென்றுள்ளதாகவும், உணவுப் பாதுகாப்புத் துறையிடமிருந்து முறையான புகார் கிடைத்தவுடன் வழக்குப் பதிவு செய்யப்பட்டு அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்தார்.