தைப்பூச விழாவில் தேர் கவிழ்ந்து விபத்து

 
தேர்

சத்தியமங்கலம் அருகே தைப்பூச தேர்த்திருவிழாவின் போது தேர் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. அதிர்ஷ்டவசமாக பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.

சத்தியமங்கலம் அடுத்த புஞ்சைபுளியம்பட்டி, கொண்டையம்பாளையம் பொன்மலை ஆண்டவர் கோயிலில் தைப்பூச திருவிழாவையொட்டி இன்று தேர் திருவிழா நடைபெற்றது. தேரில் எழுந்தருளிய பொன்மலை ஆண்டவருக்கு சிறப்பு பூஜைகள் செய்து 200-க்கும் மேற்பட்ட  ஊர் மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வந்தனர். சுமார் 200 மீட்டர் தேரை இழுத்து வந்தனர். கிராமத்தைச் சுற்றி  தேர் வலம் வந்தநிலையில், மற்றொரு தெருவுக்கு செல்ல வளைவில் திரும்பியபோது, சரிவான இடத்தில் இருந்த  குழியில், அதன் சக்கரம் சிக்கியதால், தேர் நிலை தடுமாறி, சாலையோர வீட்டின் மீது சாய்ந்து விழுந்தது. 

தேர் சாய்வதை பார்த்து கிராம மக்கள் உடனடியாக அங்கிருந்து நகர்ந்ததால் பக்தர்கள் காயம் இன்றி உயிர் தப்பினர். தேர் அங்குள்ள மின்கம்ப வயர் மீது விழுந்ததும் உடனடியாக மின்சார வாரியத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. தற்போது கிரேன் வரவழைக்கப்பட்டு தேரை மீட்கும் முயற்சியில், பக்தர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.  தேர் விழுந்து விபத்துக்குள்ளானதில்தேரை வடம்ப்பிடித்த  பக்தர்கள் காயமின்றி உயிர் தப்பினர்.