கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல்..

 
கே.பி.அன்பழகன்


 சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக  முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது இன்று குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது. தருமபுரி நீதிமன்றத்தில்   காலை 10 மணி அளவில் லஞ்ச ஒழிப்புத்துறை குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்கிறது.

 அதிமுக ஆட்சியில் உயர்கல்வித்துறை அமைச்சராக இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கே.பி.அன்பழகன் மீது லஞ்ச ஒழிப்பு போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர்.   2016 முதல் 2021 வரையிலான காலக்கட்டத்தில் வருமானத்துக்கு அதிகமாக கே.பி.அன்பழகன் ரூ.11.32 கோடி  சொத்து சேர்த்ததாக குற்றச்சாட்டு எழுந்ததை அடுத்து, இந்த வழக்கை லஞ்ச ஒழிப்புத்துறை விசாரித்து வந்தது.

கே.பி.அன்பழகன்

இதுதொடர்பாக அவரது வீட்டிலும் சோதனை நடத்தப்பட்டது.  தொடர்ந்து வழக்கு விசாரணை நடத்தப்பட்டு வந்த நிலையில், அது தொடர்பான ஆவணங்களையும் கைப்பற்றி முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்தது.  இந்த நிலையில் கிருஷ்ணமூர்த்தி என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில், கே.பி.அன்பழகன்  சொத்து குவிப்பு வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட வேண்டும் என வழக்கு தொடர்ந்தார்.  இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட், இந்த வழக்கின் நிலை குறித்து விரிவான அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும், விரைவில் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.

அதன்பேரில்  லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணையை முடித்து, இன்று காலை 10 மணிக்கு தருமபுரி நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்ய உள்ளது.  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்த பிறகு அதிமுக முன்னாள அமைச்சர் மீது தாக்கல் செய்யப்படும் முதல் குற்றப்பத்திரிக்கை இதுவாகும்.