பாடத்திட்டத்தில் விரைவில் மாற்றம்- மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தர்கள், பதிவாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. ஆலோசனை கூட்டத்தில் ஆசிரியர் நியமனம் முதல் நிர்வாக சிக்கல்கள் வரை அடுக்கப்பட்ட தொடர் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன. பல பல்கலைக்கழகங்கள் நிதி சிக்கலில் தவித்து வருகிறது என்றும், பல்கலைக்கழகங்களில் போதுமான பேராசிரியர்கள், நிர்வாக பணியாளர்கள் இல்லை என்றும் துணை வேந்தர்கள் புகார் கூறினர்.
கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தடையற்ற தரமான கல்வியை பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும். தன்னம்பிக்கையுடன் மாணவர்கள் வாழ்க்கை பாதையை அடியெடுத்து வைப்பதை உறுதி செய்ய வேண்டும். வளர்ந்துவரும் தொழில்நுட்பங்களுக்கு ஏற்ற வகையில் காலத்திற்கேற்ப மாற்றங்கள் தேவை. பொருத்த கல்வி, வேலைவாய்ப்பு, அனைவரையும் உள்ளடக்கிய தன்மை வேண்டும். கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும், காலத்திற்கு ஏற்ற மாற்றங்களை செயல்படுத்தாவிட்டால் நம் மாணவர்கள் பின்தங்கி விடுவார்கள். பாடத்திட்டம் மற்றும் கற்பித்தல் முறைகளை மாற்றியமைக்க வேண்டும்.
தேசிய கல்விக் கொள்கையை செயல்படுத்தினால் 2030க்கும் அடையலாம் என்ற கல்வி வளர்ச்சியை நாம் இப்போதே அடைந்துவிட்டோம். இந்தியாவின் கல்வி வளர்ச்சியில் தமிழ்நாடு ஒளிவிளக்காக உயர்ந்துள்ளது. உயர்க்கல்வியில் தேசிய சராசரியைவிட தமிழகம் அதிக அளவை எட்டி இருக்கிறது. மத்திய அரசின் தரவரிசை பட்டியலில் முதல் 100 இடங்களில் 22 இடங்களை தமிழக உயர்கல்வி நிறுவனங்கள் பிடித்துள்ளன. கல்வி நிலையங்களில் எந்த காரணத்தைக் கொண்டும் பகுத்தறிவுக்கு ஒவ்வாத கருத்துக்களையோ, கட்டுக் கதைகளையோ தவறியும் மாணவர்களிடம் பரப்பி விடக்கூடாது.” என்றார்.