அடுத்த சில மணி நேரத்தில் ஏற்படப்போகும் மாற்றம்! 9 மாவட்ட மக்களுக்கு பேரிடர் மேலாண்மை துறை தந்த முக்கிய எச்சரிக்கை!
வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தீவிர புயலாக வலுப்பெற்று 'முரசு' எனப் பெயரிடப்பட்டது. இது ஆந்திராவின் நெல்லூர் - நரசாபூர் இடையே, ஒங்கோல் அருகே கரையை கடக்கும் என இந்திய வானிலை மையம் எச்சரித்திருந்தது.
வானிலை மைய அதிகாரிகள் தெரிவித்ததாவது: நள்ளிரவு முதல் முரசு புயல் கரையைத் தொடத் தொடங்கியது. கரையைக் கடக்கும் தருணத்தில் மணிக்கு 100 முதல் 110 கி.மீ வேகத்திலும், இடையிடையே 120 கி.மீ வேகத்திலும் பலத்த சூறாவளிக் காற்று வீசி வருகிறது. புயல் காரணமாக கடலோர மாவட்டங்களான பிரகாசம், பாபட்லா, கிருஷ்ணா, நெல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது. பல இடங்களில் மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்துள்ளதால் மின் விநியோகம் தடைபட்டுள்ளது.
புயல் சீற்றம் காரணமாக விசாகப்பட்டினம் மற்றும் சென்னை விமான நிலையங்களில் இருந்து புறப்பட வேண்டிய 19க்கும் மேற்பட்ட விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. தேசிய பேரிடர் மீட்புப் படை மற்றும் மாநில மீட்புக் குழுவினர் தாழ்வான பகுதிகளில் உள்ள மக்களை பாதுகாப்பான முகாம்களுக்கு மாற்றியுள்ளனர். ஒடிசாவின் தெற்கு மாவட்டங்களிலும், தெலங்கானாவிலும் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
புயல் ஆந்திரா நோக்கி நகர்ந்தாலும், வட தமிழகத்தில் பலத்த காற்றுடன் கனமழை பெய்யும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட 9 மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. புயல் கரையை முழுமையாகக் கடந்து வலுவிழக்கும் வரை பொதுமக்கள் தேவையின்றி வெளியே வர வேண்டாம் என பேரிடர் மேலாண்மைத் துறை எச்சரித்துள்ளது.

