தீபாவளி பண்டிகை நாளில் மழைக்கு வாய்ப்பு...வயிற்றில் புளியை கரைக்கும் முக்கிய அறிவிப்பு!
தீபாவளி நாளில் உறுதியாக மழை பெய்யும் என்று குண்டை தூக்கி போட்டுள்ளார் தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான்.
இது தொடர்பாக அவர், சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் வரும் அக்டோபர் 15- ஆம் தேதி முதல் 20- ஆம் தேதிக்குள் வடகிழக்குப் பருவ மழை தீவிரமடைய அதிக வாய்ப்புகள் உள்ளன. இதனால் தமிழக கடற்கரைப் பகுதிகளில் கடல் காற்று காரணமாக ஒரு மேலடுக்கு சுழற்சி உருவாகி உள்ளது. இது மிகச் சிறந்த சுழற்சியாகும். இந்த மேலடுக்கு சுழற்சி காரணமாக, அக்டோபர் 17 - ஆம் தேதி முதல் 21- ஆம் தேதிகளில் வட தமிழகம் மற்றும் தெற்கு ஆந்திர மாநிலப் பகுதிகளில் மழைக்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், பல ஆண்டுகளுக்குப் பிறகு தீபாவளி நாளில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளது
கடந்த 2011- ஆம் ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை நாளில் மழை பெய்யும் என்று அவர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் தெரிவித்துள்ளார். வரும் அக்டோபர் 20- ஆம் தேதி (திங்கள்கிழமை) தீபாவளி பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. அதாவது, தீபாவளி பண்டிகைக்கு இன்னும் 2 வாரங்களே உள்ளன. இந்த பண்டிகைக்காக தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் ஜவுக் கடைகளில் துணிகளை வாங்குவது, பட்டாசு வாங்குவது என்பன உள்ளிட்ட வேலைகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து தரப்பு மக்களும் தீபாவளி பண்டிகைக்கு தயாராகி வருகின்றனர்.
இதில், தீபாவளி என்றால் மிகுந்த மகிழ்ச்சி அடைவது சிறுவர், சிறுமிகள் தான். இவர்கள் தீபாவளியன்று புத்தாடை அணிந்து, பட்டாசுகள் வெடித்து, பலகாjங்கள் உண்டு குடும்பத்தினரிடமும், நண்பர்களுடனும் தீபாவளி பண்டிகையை கொண்டாட திட்டமிடுவர். ஆனால், இந்த தீபாவளி நாளன்று உறுதியாக மழை பெய்யும் என்று தனியார் வானிலை ஆய்வாளர் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளது வயிற்றில் புளியை கரைப்பது போல உள்ளது.


