செங்கோட்டையனுக்கு சவால்..! ஆதாரம் இருந்தால் வெளியிடுங்கள் நான் அரசியலை விட்டே விலகத் தயார்! - நயினார் நாகேந்திரன்
தமிழ்நாடு பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், நெல்லையில் உள்ள அவரது இல்லத்தில் செய்தியாளர்களைச் சந்தித்தார். இந்த சந்திப்பின்போது, ஆளும் தவெக அரசின் செயல்பாடுகளையும் அவர் கடுமையாக விமர்சித்தார்.
இது குறித்து அவர் பேசியதாவது, "தமிழக அரசு ஸ்டுடியோ ஆட்சி நடத்தி வருகிறது. சிங்கப்பெண் படை அமைக்கப்பட்ட பிறகும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்துள்ளன. மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் சரத்குமார், குழந்தைக்கு மாத்திரையை பொடியாக்கிக் கொடுத்ததாக கூறுகிறார். ஆனால், சுற்றிலும் குழந்தை இல்லை.
சபாநாயகரின் கருத்துகள், நடவடிக்கைகள் சிலவற்றை நான் வரவேற்கிறேன். ஆனால், ஆதாரமற்ற கருத்துகளை முதலமைச்சர் பேசுவதை சபாநாயகர் அனுமதிக்கக் கூடாது. முதலமைச்சர் விஜய்யால் டெல்லி சிறப்பு பிரதிநிதியாக ஜனநாயகன் படத்தின் தயாரிப்பாளர் நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். மேலும், கர்நாடக முதலமைச்சர் டி.கே. சிவக்குமாரின் நண்பரும் ஆவார்.
தமிழ்நாடு அரசின் திட்டங்களையும், தேவையான நிதியையும் பெற்று தர வேண்டிய இடத்தில் உள்ள டெல்லி சிறப்பு பிரதிநிதி இடத்திற்கு அண்டை மாநிலத்தைச் சேர்ந்தவரை நியமிப்பது சரியான அணுகுமுறையா? என்கிற கேள்வி எனக்கு எழுகிறது.
அமைச்சர் செங்கோட்டையனுக்கு கணக்கு சரியாக வராது. பாஜகவுக்கு வாக்கு வங்கி சரிந்துவிட்டதாக கூறுகிறார். கடந்த மக்களவைத் தேர்தலை விட தற்போது 0.8 சதவீதம் கூடுதலாக வாக்குகளைப் பெற்றுள்ளோம். இந்த கணக்கு கூட தெரியாதவர் வருவாய்த் துறையில் என்ன சாதிக்கப் போகிறார்?
நான் கல்லூரி தொடங்குவதற்காக விண்ணப்பித்ததாக கூறப்படும் கடிதம் செங்கோட்டையனிடம் இருந்தால் அதை வெளியிடலாம். அது உண்மையாக இருந்தால் நான் அரசியலை விட்டு விலகத் தயாராக இருக்கிறேன். இல்லையெனில் அவர் அமைச்சர் பதவியை விட்டு விலகத் தயாரா? மாணவர்களின் அடையாள அட்டைகளில் ஜாதி பெயரைக் குறிப்பிடுவது கண்டனத்திற்குரியது. ஐஏஎஸ் அதிகாரிகளின் பதவிக்கான மரியாதையை கூட இந்த அரசின் அமைச்சர்கள் கொடுப்பதில்லை" என தெரிவித்தார்.

