பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய அரசு ஒப்புதல்

சென்னை பரந்தூர் விமான நிலையத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது.
சென்னை மாநகரின் இரண்டாவது பெரிய விமான நிலையம் பரந்தூரில் அமைக்கப்படவுள்ளது. சென்னைக்கான இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காக பரந்தூர், திமுக அரசு பொறுப்பேற்பதற்கு முன்பே அதாவது 2020-ஆம் ஆண்டிலேயே முந்தைய ஆட்சியினால் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டது. ஆனால் பரந்தூரில் விமான நிலையம் அமைக்க எதிர்ப்பு அதிகரித்திருக்கும் நிலையில், இந்திய விமான நிலையங்கள் ஆணையம் ஆய்வு செய்து பரிந்துரைத்த இரு இடங்களில் ஒன்றான பரந்தூரில் புதிய விமான நிலையம் அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பரந்தூரில் அமையவிருக்கும் புதிய விமான நிலையத்தை செயல்படுத்தி முடிப்பது தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான பயணத்தில் முக்கியமான மைல்கல் என்றும் அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியிருந்தார்.
இந்நிலையில் பரந்தூர் விமான நிலைய திட்ட அனுமதிக்கான கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியது விமான போக்குவரத்து அமைச்சகம். இது தொடர்பாக பேசிய மத்திய அமைச்சர் ராம் மோகன் நாயுடு, “பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் சென்னை போன்ற பெருநகரங்களுக்கு இரண்டாவது விமான நிலையம் அவசியம். தமிழ்நாட்டில் விமான போக்குவரத்து துறையின் அடிப்படை கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. கட்டுமான பணிகளுக்கான டெண்டர் விரைவில் கோரப்படவுள்ளது. கட்டுமான பணிகளை மேற்கொள்ளும் கூட்டு நிறுவனத்தை தேர்வு செய்யும் பணியை டிட்கோ விரைவில் தொடங்க உள்ளது” என்றார்.