பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன் வரவேண்டும் - எம்எல்ஏ வேல்முருகன்

 
velmurugan

நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று எம்எல்ஏ வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவரும், எம்எல்ஏவுமான  வேல்முருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், " சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலையில் சரிவு ஏற்பட்டுள்ளது. கச்சா எண்ணெய் விலை கடந்த 7 மாதங்களில் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. இன்று கச்சா எண்ணெய் ஒரு பீப்பாய்க்கு 92 டாலராக உள்ளது.ஆனால், இந்தியாவில் பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் தொடர்ந்து அதிக விலைக்கு விற்கப்படுவது கண்டனத்துக்குரியது.

petrol

சர்வதேச சந்தை நிலவரத்திற்கேற்பவே இந்தியாவில் எரிபொருள் விலை நிர்ணயிக்கப்படுவதாக கூறி வரும் மோடி அரசு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை உயர்ந்த போதெல்லாம் உள்நாட்டில் அதைக் காரணம் காட்டி உயர்த்தியது. ஆனால், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தபோது, பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மோடி அரசு முன்வரவில்லை.ரஷ்யாவிடமிருந்து எரிபொருள் வாங்குவதை அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தவிர்க்கும் நிலையில், ரஷ்யாவிடமிருந்து குறைந்த விலையில் எரி பொருளை வாங்கும் மோடி அரசு, நுகர்வோருக்கு குறைந்த விலையில் எரிபொருளை தர மறுப்பது எந்த வகையில் நியாயம்.

central

எனவே, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்துள்ளதால், நாடு முழுவதும் பெட்ரோல், டீசல் விலையை குறைக்க மத்திய அரசு முன் வரவேண்டும் என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சி கேட்டுக்கொள்கிறது" என்று குறிப்பிட்டுள்ளார்.