"தமிழகத்தை மத்திய அரசு ஓரவஞ்சனை, புறக்கணிப்பு செய்கிறது" - டி.ஆர்.பாலு
மக்களவையில் மத்திய அமைச்சர்கள், டி.ஆர்.பாலு இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. டி.ஆர்.பாலுவின் பேச்சை அவைக் குறிப்பில் இருந்து நீக்க பாஜக கோரிக்கை விடுத்தனர். தலித் அமைச்சரை தகுதியற்றவர் என டி.ஆர்.பாலு கூறியதற்கு அவர் மன்னிப்பு கோர வேண்டுமென மத்திய அமைச்சர்கள் வாக்குவாதம் செய்தனர். மக்களவையில் இருந்து திமுக மற்றும் கூட்டணிக் கட்சி எம்.பி.கள் வெளிநடப்பு செய்தனர்.
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த போது, மக்களவையில் பட்டியலின அமைச்சரை அவமதித்து விட்டதாக பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர்; மத்திய அரசு ஓரவஞ்சனையுடன் செயல்படுகிறது. வெள்ள பாதிப்பு, நிவாரண நிதி குறித்து மக்களவையில் கேள்வி எழுப்பினேன்; என்னை கேள்வி கேட்க விடாமல் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் குறுக்கிட்டார்; துறைக்கு சம்பந்தமில்லாமல் எல்.முருகன் குறுக்கிட்டதால் அவரை அமரச் சொன்னேன். எல்.முருகனை அவமதித்துவிட்டதாக கூறி பாஜகவினர் கண்டனம் தெரிவிப்பது தவறானது. ஒரு தமிழர் என்ற முறையில் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் செயல்படவில்லை. தேர்தலில் வெற்றிபெற வேண்டுமென்ற பதற்றத்தில் பிரதமர் மோடி செயல்படுகிறார்; பிரதமர் நல்ல நண்பர்; ஆனால் மக்களவையில் பிரதமரின் உரை வருத்தமளிக்கிறது.
பிரதமர் தன்னுடைய இமேஜை தாழ்த்தி இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவது வருத்தமளிக்கிறது; "இந்தியா" கூட்டணியை பார்த்து பாஜக பயத்தில் உள்ளது. பொது சிவில் சட்டத்தை "இந்தியா" கூட்டணியில் உள்ள 28 கட்சிகளும் எதிர்க்கும். பாஜகவினர் சித்தரித்துப் பேசுகின்றனர். நிதி ஒதுக்கீட்டில் பாரபட்சம் இருப்பதை கண்டித்து பிப்.8ல் கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தவுள்ளோம் என்று குறிப்பிட்டுள்ளார்.