தமிழ் மொழியைப் புறக்கணிக்கிறதா மத்திய அரசு? மக்கள் நீதி மய்யம் கேள்வி!

 
kamal-haasan-33f

தமிழ் மொழியை மேடைகளில் பாராட்டிப் பேசினால் மட்டும் போதுமா இந்தியப் பிரதமர் அவர்களே? என்று மக்கள் நீதி மய்யம் கேள்வி எழுப்பியுள்ளது. 

kamal-23

இதுகுறித்து மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில், "இந்தியப் பிரதமர் விழா மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறளையும் பாராட்டிப் பேசுகிறார். ஆனால், நடைமுறையில் மத்திய அரசு தமிழ் மொழியைப் புறக்கணிக்கவே செய்கிறது என்று தொடர்ந்து எழும் குற்றச்சாட்டுகள் வேதனை அளிக்கின்றன. மத்திய கலாச்சாரத் துறையின் கீழ் செயல்படும், இந்தியக் கலாச்சார உறவுக்கான கவுன்சில் (ஐசிசிஆர்) அமைப்பில் 1970 முதல் வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் இந்தியப் பேராசிரியர்களுக்கான வருகை தரு இருக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் சமஸ்கிருதம், இந்தி, தமிழ், வரலாறு, பொருளாதாரம், தத்துவம், பெங்காலி நாட்டுப்புற நடனம், உருது, புத்த மதம், இந்தியக் கல்வி உள்பட 11 வகை பாடப் பிரிவுகளுக்கான இருக்கைகள் உள்ளன. 2014-க்குப் பிறகு இருக்கைகள் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து, தற்போது 51 இருக்கைகள் மட்டுமே உள்ளன. இதில் ஹிந்திக்கு 14 இருக்கைகளும், சமஸ்கிருதத்திற்கு 5 இருக்கைகளும், இந்தியக் கல்விக்கு 26 இருக்கைகளும், பிற இருக்கைகளுக்கு 6 இடமும் ஒதுக்கப்பட்டுள்ளன. ஐசிசிஆர் இணையதளத்தில் உள்ள இப்பட்டியலில் செம்மொழியான தமிழ் இடம்பெறவே இல்லை என்பதுதான் அதிர்ச்சி தரும் செய்தி!

Tamil

மேற்குறிப்பிட்ட பட்டியலில் தமிழ் இடம்பெறவில்லை என்ற நிலையில் அண்மையில் ஐசிசிஆர் சார்பில் வெளியிட்ட வெளிநாட்டுக் கல்வி நிறுவனங்களில் பணியாற்ற விரும்பும் பேராசிரியர்களை விண்ணப்பிக்ககோரும் விளம்பரத்தில் தமிழ்மொழி இடம் பெற்றிருந்தது  அதிலும், உலகின் தொன்மையான தமிழ் மொழிக்கு 2 இருக்கைகள் மட்டுமே இருப்பதும், போலந்து நாட்டிலுள்ள இந்த இருக்கைகளுக்கு 2014முதல் பேராசிரியர்கள் நியமிக்கப்படாததும் மத்திய அரசின் ஓரவஞ்சனையையே காட்டுகிறது. எனவே, ஐசிசிஆர் பட்டியலில் தமிழைச் சேர்ப்பதுடன், மேலும் பல நாடுகளில் தமிழுக்கான இருக்கைகளை உருவாக்கவும் வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுக்கிறது. பொதுவாகவே, மத்திய அரசின் திட்டங்கள், அறிவிப்பு வெளிவரும்போது அதில் தமிழும், தமிழக மக்களும் புறக்கணிப்பதாக எழும் விமர்சனங்களில் உண்மை இல்லாமல் இல்லை. தமிழகத்துக்கு வரும்போது மட்டும் மேடைகளில் தமிழ் மொழியையும், திருக்குறள், சங்க இலக்கியப் பாடல்களையும் மேற்கோள்காட்டிப் பேசுவதும், நடைமுறையில் தமிழைப் புறக்கணிப்பதும் மத்திய அரசுக்கும், பிரதமர் மற்றும் அமைச்சர்களுக்கும் வாடிக்கையாகி விட்டது.இப்போது தமிழ் மொழிக்கு வேண்டியது புகழ் மாலையல்ல.வளர்ச்சிப்பாதை. ஆனால் மத்திய அரசு தமிழ் மொழியின் வளர்ச்சியை முடக்கும் காரியத்தை செய்வது வேதனையளிக்கிறது இந்தி, சமஸ்கிருதம் உள்ளிட்ட மொழிகளுக்கு மத்திய அரசு ஒதுக்கப்படும் நிதியுடன் ஒப்பிடுகையில், மேன்மையான தமிழ் மொழிக்கு மிகக் குறைந்த அளவு நிதியே ஒதுக்கப்படுகிறது என்ற குற்றச்சாட்டுகளுக்கு இனியாவது முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். 

kamal hassan

ஏற்கெனவே, தேசிய கல்விக் கொள்கையை தமிழைத் தவிர பெரும்பாலான தேசிய மொழிகளில் வெளியிட்டது மத்திய அரசு. கடும் எதிர்ப்புகளுக்குப் பின் தமிழ் மொழியில் வெளியிடப்பட்டது. இதேபோல, அஞ்சல் துறையில் அஞ்சலக கணக்கர் தேர்வுக்கான மொழி பட்டியல் ஆங்கிலம், இந்தி மட்டுமே இடம் பெற்றன. இது தொடர்பாக கண்டனம் எழுந்த பின்னர், தமிழிலும் தேர்வுகள் நடத்தப்படும் என மத்திய அரசு அறிவித்தது. போட்டித் தேர்வுகளில் மாநில மொழி புறக்கணிக்கப்பட்டால், கிராமப்புற இளைஞர்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள். இப்படி பல்வேறு விஷயங்களில் தமிழ் மொழியைப் புறக்கணிப்பது மத்திய அரசுக்கு அழகல்ல! எல்லா மாநில மொழிகளுக்கும் முக்கியத்துவம் தருவது அவசியம். மத்திய அரசும், அமைச்சர்களும் இனியாவது இவ்விஷயத்தில் மிகுந்த கவனமுடன் செயல்பட்டு, தமிழ்ச் செம்மொழிக்கு உரிய முக்கியத்துவம் அளிப்பதுடன், தமிழ் மொழி மேம்பாட்டுக்கு உரிய நிதியை ஒதுக்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் வலியுறுத்துகிறது." என்று குறிப்பிட்டுள்ளது.