மேகக்கூட்டத்துக்குள் ஹெலிகாப்டர்... அடுத்து நடந்தது என்ன? - குன்னூர் விபத்து குறித்த பரபர தகவல்கள்!

 
ஹெலிகாப்டர் விபத்து

இந்திய ராணுவத்தின் உச்சபட்ச தலைவராக விளங்கியவர் பிபின் ராவத். விமானப் படை, கடற்படை, தரைப்படை என முப்படைகளுக்கும் அவர் தான் தலைமை தளபதியாக இருந்தார். அவர் ஏற்கெனவே இந்திய ராணுவ தலைமை தளபதியாக இருந்திருக்கிறார். பிபின் ராவத் கடந்த 8ஆம் தேதியன்று தனது மனைவியுடன் நீலகிரியிலுள்ள வெலிங்டன் ராணுவ கல்லூரிக்குச் செல்ல திட்டமிட்டிருந்தார். அதன்படி அவருடன் அவருடைய தனி பாதுகாப்பு அதிகாரி, இன்னபிற பாதுகாப்பு கமாண்டோக்கள், விமான ஓட்டிகள என மொத்தமாக 14 பேர் பயணித்தனர். இந்த ஹெலிகாப்டர் இலக்கை அடைய 7 நிமிடத்திற்கு முன்பாகவே விபத்துக்குள்ளானது.

ஹெலிகாப்டர் விபத்து

குன்னூரு அருகே நஞ்சப்பசத்திரத்திலுள்ள தேயிலை எஸ்டேட் பகுதியில் இருந்த மரங்களில் மோதியதால் தடுமாறி கீழே விழுந்து விபத்துக்குள்ளாது. இதில் சம்பவ இடத்திலேயே 10 பேர் உயிரிழந்தனர். மேலும் மூவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். பிபின் ராவத்தும் அவரது மனைவி மதுலிக்காவும் பலியாகினர். உயிர் பிழைத்த வருண் சிங்குக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனால் பலனளிக்காமல் சில நாட்களுக்கு முன் அவரும் மரணமடைந்தார். இதுகுறித்து விசாரிக்க ஏர் மார்ஷல் மன்வேந்தர் சிங் தலைமையில் முப்படை அதிகாரிகள் அடங்கிய உயர்நிலைக் குழு அமைக்கப்பட்டது. 

Who is Madhulika Rawat, wife of CDS General Bipin Rawat - Know all about  her | India News – India TV

பல்வேறு வகையான ஹெலிகாப்டர்களை 6,600 மணி நேரம் இயக்கிய அனுபவம் கொண்ட மன்வேந்தர் சிங் மற்றும் குழுவினர் நஞ்சப்ப சத்திரம் பகுதியில் முகாமிட்டு நேரடி விசாரணை நடத்தினர். கடந்த 9ஆம் தேதி ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டி  கண்டெடுக்கப்பட்டது. அவற்றில் பதிவான கடைசி நேர உரையாடல்களை முப்படைகளின் குழு ஆய்வு செய்துள்ளது. இச்சூழலில் விசாரணை குழு தனது முழுமையான அறிக்கையை தயார் செய்திருப்பதாகவும் அடுத்த ஒரு வாரத்தில் மத்திய அரசிடம் அறிக்கை தாக்கல் செய்யப்படும் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

Why aircraft accidents happen – Coonoor crash inquiry will have impact on  IAF's VVIP ops

அந்த அறிக்கையில் மோசமான வானிலையே விபத்துக்கு காரணம் என குறிப்பிடப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மேகக்கூட்டத்துக்குள் நுழைந்ததால் ஹெலிகாப்டர் வழிதவறி விபத்துக்குள்ளானது என்றும், மேகத்துக்குள் நுழைந்ததால் விமானியால் பாதையை கணிக்க முடியாமல் போயிருக்கலாம் என கண்டறியப்பட்டிருப்பதாகவும் சொல்லப்பட்டுள்ளது. முப்படைகளின் இந்த கூட்டு ஆய்வறிக்கை சட்டரீதியாக சரிபார்க்கப்பட்ட பின், மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளது. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்படலாம் என தெரிகிறது.