ரஷ்யாவில் 19 பேருடன் விழுந்து நொறுங்கிய ராணுவ விமானத்தின் பதைபதைக்கும் CCTV காட்சிகள்!

 
1

ரஷ்ய அரசு ஊடகங்கள் வெளியிட்டுள்ள தகவலின்படி, கெமரோவோ (Kemerovo) பிராந்தியத்தில் உள்ள ஆள்நடமாட்டம் இல்லாத பகுதியில், வழக்கமான திட்டமிடப்பட்ட பயணத்தின்போது An-12 ரக ராணுவ விமானம் விழுந்து நொறுங்கியதாகப் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொழில்நுட்பக் கோளாறு காரணமாகவே இந்த விபத்து நிகழ்ந்திருக்கலாம் என முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாகவும், ரஷ்ய விமானப் போக்குவரத்து அதிகாரிகள் இது குறித்துத் தீவிர விசாரணை நடத்தி வருவதாகவும் அமைச்சகம் குறிப்பிட்டுள்ளது.

விபத்து நிகழ்ந்த யாகுனோவோ (Yagunovo) கிராமத்திற்கு அருகே விரைந்து சென்ற அவசரகால மீட்புக் குழுவினர், விமானத்தில் பற்றிய தீயை விரைவாக அணைத்ததாகவும், அந்தப் பகுதி முழுவதும் காவல்துறையினரால் சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் உள்ளூர் ஆளுநர் இலியா செரெடியுக் தெரிவித்துள்ளார்.

விபத்து நடந்த இடத்தை நேரில் பார்வையிட்ட ஆளுநர் செரெடியுக், மீட்புப் பணிகளுக்காக ஹெலிகாப்டர் மற்றும் மருத்துவ வசதிகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும், விசாரணை அதிகாரிகள் தங்களது பணியைத் தடையின்றி மேற்கொள்ள உதவுவதே தற்போதைய முக்கியப் பணி என்றும் கூறினார். மேலும், விபத்துக்குள்ளான விமானத்தின் சிதைவுகளுக்கு இடையே தீயணைப்பு வீரர்கள் தேடுதல் பணியில் ஈடுபட்டிருப்பதையும், அருகில் ஆம்புலன்ஸ்கள் நிறுத்தப்பட்டிருப்பதையும் காட்டும் வீடியோ ஒன்றையும் அவர் வெளியிட்டுள்ளார்.

இதற்கிடையில், விமானம் விபத்துக்குள்ளான தருணத்தைப் பதிவு செய்ததாகக் கூறப்படும் சிசிடிவி (CCTV) காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. அதில், தொலைதூர வானில் ஒளிரும் பொருள் ஒன்று கீழே விழுவதும், அதனைத் தொடர்ந்து வானம் வெளிச்சமாகும் அளவிற்குப் பயங்கர வெடிவிபத்து ஏற்படுவதும் பதிவாகியுள்ளது.