ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் சிபிஐ போலீசார் மீண்டும் மறு வழக்குப்பதிவு..!
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழக தலைவராக இருந்த ஆம்ஸ்ட்ராங், கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 5 ஆம் தேதி அன்று படுகொலை செய்யப்பட்டார். சென்னை பெரம்பூரில் சொந்தமாக அவர் கட்டி வந்த வீட்டை பார்வையிட சென்ற போது மர்மகும்பல் அவரை வெட்டி சாய்த்தது. இந்த படுகொலை தொடர்பாக செம்பியம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். இந்த படுகொலை வழக்கை 50க்கும் மேற்பட்ட போலீசார் அடங்கிய தனிப்படையால் விசாரிக்கப்பட்டது.
இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்ட திருவேங்கடம், என்கவுன்டர் முறையில் போலீசாரால் சுட்டு கொல்லப்பட்டார். இந்த வழக்கில் விசாரணை அதிகாரியாக இருந்த உதவி கமிஷனர் சரவணன் 7 ஆயிரம் பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தார்.
இந்த வழக்கில் 30 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டது. அவர்களில் திருவேங்கடமும், பிரபல தாதா நாகேந்திரனும் இறந்துவிட்டனர். பிரபல ரவுடிகள் மொட்ட கிருஷ்ணன், சம்போ செந்தில் ஆகியோரும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக காவல் துறை சார்பில் சேர்க்கப்பட்டனர். அவர்களை கைது செய்ய முடியவில்லை. சம்போ செந்தில் இங்கிலாந்து நாட்டிலும், மொட்ட கிருஷ்ணன் அரபு நாடு ஒன்றிலும் பதுங்கி தலைமறைவாகியுள்ளனர் என காவல் துறை சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்கள் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்ய சர்வதேச போலீஸ் உதவியும் நாடப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றி உத்தரவிட, ஆம்ஸ்ட்ராங் குடும்பத்தின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் முறையிட்ட நிலையில், சிபிஐ விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்பேரில் சி.பி.ஐ. போலீசார் இந்த வழக்கு விசாரணையை கையில் எடுத்துள்ளனர்.
இந்த வழக்கு தொடர்பான ஆவணங்கள் சி.பி.ஐ. போலீசார் வசம் ஒப்படைக்கப்பட்டது. தற்போது இந்த படுகொலை சம்பவம் தொடர்பாக செம்பியம் போலீசார் பதிவு செய்த வழக்கை அடிப்படையாக கொண்டு சி.பி.ஐ. போலீசார் மீண்டும் தனியாக வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இந்த வழக்கில் 100க்கும் மேற்பட்ட சாட்சிகள் இடம் பெற்றுள்ளனர். அவர்கள் ஒவ்வொருவரிடமும் சி.பி.ஐ. போலீசார் விசாரணையை தொடங்கியுள்ளனர். சி.பி.ஐ. விசாரணையில் புதிதாக குற்றவாளிகள் கைது செய்யப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. இந்த வழக்கை விரைவாக விசாரித்து புதிய குற்றப்பத்திரிகையை சி.பி.ஐ. போலீசார் தாக்கல் செய்ய வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த வழக்கில் ஏற்கனவே கைது செய்யப்பட்ட 26 பேரில், தற்போது 12 பேர் நீதிமன்ற ஜாமீன் பெற்று வெளியில் உள்ளனர். இந்த நிலையில் ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு தொடர்பாக கொலை சம்பவம் அரங்கேறிய பெரம்பூர் வேணுகோபால் சாமி தெருவில் சிபிஐ போலீசார் நேரில் சென்று விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு யாரெல்லாம் உடந்தையாக இருந்தார்கள், இந்த கொலைக்கான உண்மை காரணங்கள் என்ன, கொலைக்கு பின்னணியில் செயல்பட்டவர்கள் யார்? யார்? என முழுமையான விசாரணையை சிபிஐ நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
குறிப்பாக இந்த வழக்கில், தனிப்படையில் இடம் பெற்றிருந்தவரும், திருவேங்கடத்தை என்கவுன்டர் மூலம் சுட்டு வீழ்த்தியவருமான காவல் ஆய்வாளர் புகாரி, சவுகார் பேட்டை தொழிலதிபரை மிரட்டி ரூபாய் 40 லட்சம் லஞ்சம் பெற்ற புகாரில் சமீபத்தில் பூக்கடை போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் இந்த வழ்க்கை சிபிஐ தற்போது விசாரணை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

