வாட்ஸ்அப்பில் வந்த லிங்க்கை தொட்ட சிபிஐ அதிகாரி மனைவியிடம் ரூ.2.58 கோடி மோசடி
வாட்ஸ்அப்பில் வந்த லிங்க் பங்குச் சந்தையில் வர்த்தகம் செய்வதால் அதிக லாபம் எனக்கூறி விருப்ப ஓய்வு பெற்ற சி.பி.ஐ. இணை இயக்குனர் லட்சுமிநாராயணாவின் மனைவியிடம் ரூ 2.58 கோடி மோசடி செய்த கும்பலை போலீசார் தேடிவருகின்றனர்.

ஆந்திர முன்னாள் முதல்வரும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி மீது சி.பி.ஐ. வருமானத்திற்கு அதிகமான சொத்து குவிப்பு வழக்கில் விசாரணை மேற்கொண்ட சி.பி.ஐ. முன்னாள் இணை இயக்குநர் வி.வி. லட்சுமிநாராயணா ஆவர். அவரது விசாரணைக்கு பிறகு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து ஜெகன்மோகன் ரெட்டியை 16 மாதம் சிறையில் அடைக்கப்பட்டது. இந்தநிலையில் ஆந்திர மாநில பிரிவினைக்கு பிறகு தனது பணியை ராஜினாமா செய்து விருப்ப ஓய்வு பெற்றார். 2019 ஆண்டு நடிகர் பவன் கல்யாணின் ஜனசேனா கட்சியில் இணைந்து விசாகப்பட்டினம் தொகுதியில் போட்டியிட்டு தேல்வி அடைந்ததால் அதன் பிறகு ஜனசேனா கட்சியில் இருந்து 2020 ஆண்டு விலகி 2023 ஆண்டு ஜெய பாரத் எனும் கட்சியை தொடங்கினார்.
இந்தநிலையில் அவரது மனைவி ஊர்மிளாவிற்கு வாட்ஸ்அப் மூலம் வந்த லிங்கில் பங்குச் சந்தையில் முதலீடு செய்வதன் மூலம் 500% லாபம் கிடைக்கும் என்று வந்ததை நம்பினார். இதனையடுத்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 5, 2025 வரை 19 தவணைகளில் மொத்தம் ரூ.2.58 கோடியை முதலீடு செய்தார். இதற்காக, தன்னிடமும் கணவரிடமும் இருந்த தங்கத்தை அடமானமாகக் கடன் வாங்கி முதலீடு செய்தார். ஆனால் முதலீடு செய்த பணத்திற்கு உண்டான லாபம் இல்லாவிட்டாலும் முதலீடு செய்த தொகைக்கும் சரியான பதில் இல்லாததால் இறுதியாக தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த அவர் இந்த மாதம் 6 ஆம் தேதி ஹைதராபாத் போலீசில் புகார் அளித்தார். இந்த சம்பவம் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய, மாநில அரசும் போலீசாரும் பல எச்சரிக்கை செய்து வந்தாலும் முன்னாள் சி.பி.ஐ. இணை இயக்குனர் குடும்பத்தினரையே சைபர் மோசடி செய்து ஏமாற்றிய சம்பவம் அனைவரது மத்தியிலும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது.


