தொடரும் உயிரிழப்புகள்..! நீட் மறுதேர்வு பயத்தால் மீண்டும் ஒரு மாணவி விபரீத முடிவு..!

 
suicide

தர்மபுரி மாவட்டம், பாலக்கோடு சேர்ந்தவர் ராமகிருஷ்ணன். இவர் பாலக்கோடு கூட்டுறவு சர்க்கரை ஆலையில் பணி புரிந்து வருகிறார். இவர்களின் மகள் ரோஷ்னி (18).

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் 12ம் வகுப்பை நல்ல மதிப்பெண்ணில் தேர்ச்சி பெற்ற இவர், மருத்துவப் படிப்பில் சேர வேண்டும் என்ற கனவுடன் நாமக்கல் மாவட்டத்தில் உள்ள நீட் தேர்வு பயிற்சி மையத்தில் சேர்ந்து தீவிர பயிற்சி பெற்று வந்தார்.

இந்த நிலையில், இன்று (ஜூலை 21) நடைபெற உள்ள நீட் மறுதேர்வை முன்னிட்டு சொந்த ஊருக்கு வந்த மாணவி, நேற்று மாலை வீட்டில் யாரும் இல்லாத நேரமாக பார்த்து தூக்கிட்டு விபரீத முடிவை எடுத்தார். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர், பாலக்கோடு காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த போலீஸார் மாணவியின் உடலை கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், மாணவியின் இந்த முடிவுக்கு தேர்வு அச்சம் காரணமா? அல்லது வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளனவா? என பல்வேறு கோணங்களில் போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தொடரும் உயிரிழப்புகள் :

நீட் தேர்வு காரணமாக சமீபத்தில் கோவையை சேர்ந்த அனுகீர்த்தனா மற்றும் சேலத்தை சேர்ந்த கோபிகா என்ற இரண்டு மாணவிகள் விபரீத முடிவெடுத்தனர். மாணவிகளின் இந்த முடிவுக்கு மே 3 இல் நடைபெற்ற இளநிலை நீட் தேர்வு ரத்து போன்ற நடவடிக்கைகளும் ஓர் காரணம் என கூறப்படுகிறது.