நாங்குநேரி அருகே மற்றொரு மாணவன் மீது சாதி வெறித் தாக்குதல்!
நாங்குநேரி அருகே மூலைக்கரைப்பட்டி அரசு உயர்நிலைப் பள்ளியில் மறவர் சமூகத்தை சார்ந்த பல மாணவர்கள் சேர்ந்து கொண்டு பறையர் சமூகத்தை சார்ந்த மாணவனை கம்பி, கட்டை மற்றும் ஆயுதங்கள் கொண்டு கொலை வெறி தாக்குதல் நடத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நாங்குநேரி அருகே இருக்கும் ரெங்கசமுத்திரம் கிராமத்தைச் சார்ந்த வேலாண்டி என்பவரின் மகன் பிரவீன் மூலக்கரைப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். இவருடன் மேல அரியநாயகிபுரம் கிராமத்தைச் சேர்ந்த பொன் கார்த்திக் என்ற மாணவனும் மற்றொரு கிராமத்தைச் சேர்ந்த இசக்கிமுத்து என்ற மாணவனும் படித்து வருகிறார்கள். பொன் கார்த்திக் என்ற மாணவர் சக மாணவர்களிடம் ஜாதி ரீதியான மேலாதிக்க மனோபாவத்தோடு நடந்து கொள்வதை வழக்கமாக வைத்துள்ளார். பொன் கார்த்திக் தொடர்ந்து மாணவன் பிரவினை ஜாதி ரீதியாக அணுகியதோடு தொடர்ந்து துன்புறுத்தி வந்துள்ளார். குறிப்பாக கையில் இருக்கும் ஏதாவது ஒரு பொருள் கொண்டு உடலில் ஏதாவது ஒரு இடத்தில் குத்துவது அதற்கு பிரவீன் எதிர்ப்பு தெரிவித்தால் ஜாதி ரீதியாக திட்டி மிரட்டுவது என தொடர்ந்து நடந்துள்ளது.
நேற்று முன்தினம் 27-07-2026 அன்று பள்ளியில் பிரவின் மரத்தடியில் சக மாணவர்களோடு அமர்ந்து கொண்டிருக்கும் போது இசக்கிமுத்து என்ற மாணவர் பிரவினை அழைத்து உன்னை பொன் கார்த்திக் அழைக்கிறான் என்று கூறி இருக்கிறார். இசக்கி முத்து அழைக்கவும் பிரவீன் பொன் கார்த்திக் நிற்கும் இடத்திற்கு சென்று இருக்கிறார். என்னை ஏன் அழைக்கிறாய் என்று பொன் கார்த்திகிடம் பிரவீன் கேட்கவும் அப்போது பொன் கார்த்திக் அநாகரிகமான வார்த்தைகளாலும் ஜாதி ரீதியாகவும் திட்டி கையில் வைத்திருந்த உடைந்த பெஞ்சியின் கட்டையால் தலையில் ஓங்கி மாறி மாறி அடித்திருக்கிறார். இதில் காயம் அடைந்த மாணவன் பிரவீன் அந்த இடத்திலேயே சுருண்டு விழுந்து இருக்கிறார். உடனே அங்கிருந்து பொன் கார்த்திக் மற்றும் இசக்கிமுத்து ஆகிய இருவரும் சுவர் ஏறி குதித்து ஓடி இருக்கிறார்கள். உடனடியாக பள்ளி நிர்வாகம் பிரவினை மூலக்கரைப்பட்டி அரசு மருத்துவமனையில் சேர்த்து முதல் சிகிச்சை பெற்று பின்னர் பாளையங்கோட்டை அரசு மருத்துவமனைக்கு உயர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை நடைபெற்று வருகிறார்.

