சாதி ரீதியான வன்முறைகள் இந்தியாவில் மட்டும் தான் - அமைச்சர் மனோ தங்கராஜ்..

 
mano

பல உலக நாடுகளுக்கு பயணித்த அடிப்படையில் சொல்கிறேன், இந்தியாவில் மட்டும் தான் சாதி ரீதியான பல வன்முறைகள் நடப்பதாக அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார். 

சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள எம்.சி.சி பள்ளியில் கல்வி மேம்பாட்டிற்கான கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இந்த கருத்தரங்கில் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், எம் பி வில்சன் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். அப்போது விழா மேடையில் பேசிய அமைச்சர்  மனோ தங்கராஜ், “சிறுபான்மையினர் பள்ளிகளுக்கு  நிகழ்ச்சி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர். தமிழ்நாட்டில் சிறுபான்மையினர் மக்கள் பாதுகாப்பாக இருப்பதற்கு காரணம் முத்தமிழ் அறிஞர் கலைஞர் தான். 

கல்வி முற்றிலுமாக மறுக்கப்பட்ட சமுகத்தில் வாழ்ந்து கொண்டிருந்தோம். அந்நிலையை போக்கும் ஆயுதமாக மீண்டும் கல்வி பிறந்தது. குறிப்பாக 17 சதவீதம் கிறிஸ்துவர்கள் உயர்ந்த பொறுப்பில்  இருந்த நிலையில் தற்போது 1 சதவீதம் தான் உள்ளார்கள் என்பதை உற்று கவனிக்க வேண்டியது. மேலும் மற்ற ஒரு சமூகம்  70 சதவீதம் உயர்ந்துள்ளது. பொதுவான உரிமை சிறுபான்மை மக்களுக்கு மறுக்கப்படுகிறது. தனியாக வழங்கப்பட்ட உரிமைகளிலும் பிரச்சனை உள்ளது. இந்த இரண்டாம் நிலை சிறுபான்மை மக்களுக்கு இல்லை என்பது என் கருத்து எல்லோரும் சமம் என்ற தன்மை வர வேண்டும். இது நமக்கான அச்சுறுத்தல் இல்லை தேசத்திற்கான அச்சுறுத்தல் இதற்கான விழிப்புணர்வு வேண்டும்.” என்றார்.

மனோ தங்கராஜ்

இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மனோ தங்கராஜ் கூறுகையில், “தமிழக முதல்வர் பல சமூகங்களை ஒன்றிணைத்து அவற்றின் முன்னேற்றத்திற்காகவும் சமத்துவத்திற்காகவும் அரும்பாடு பட்டு வருகிறார். என் காரணமாக தான் சமத்துவ வழியில் பெண்கள் விளிம்பு நிலை மக்கள் என அனைவரும் முன்னேற்றத்தை அடைந்து வருகிறார்கள். குறிப்பாக கல்விலும் வேலை வாய்ப்பிலும் யாருக்கும் எந்த மாநிலத்திலும் இல்லாத அளவிற்கு ஒரு முன்னேற்றம் தொடர்ந்து தமிழக அரசு மேற்கொண்ட பல திட்டங்களின் வாயிலாக வளர்ச்சி அடைந்து வருகிறார்கள். இதன் காரணமாக தான் இன்னும் நூறாண்டு காலங்கள் கூட திராவிட அரசியல் இந்த மண்ணில் இருக்க வேண்டிய அவசியம் தேவை இருக்கிறது. 

திமுக அரசு பெருந்தலைவர் காமராஜரை புறக்கணித்து பேசுகிறது என்பது மிகவும் ஒரு தவறான கருத்து. நானும் முத்தமிழ் அறிஞர் கலைஞரும் பல மேடைகளில் பெருமைப்படுத்தி  பேசியுள்ளோம். பல உலக நாடுகளுக்கு சென்று வந்துள்ளேன், அதன் அடிப்படையிலேயே  இந்தியாவில் மட்டும் தான் சாதி ரீதியில் பல வன்முறைகள் பல புறக்கணிப்புகள் நடைபெற்று வருகிறது என குறிப்பிட்டுள்ளேன். வட மாநிலங்களில் காந்தியத்தை அடிப்படையாகக் கொண்டு பல வன்முறைகள் அதிக அளவில் நடைபெற்று உள்ளது. ஆனால் தமிழகத்தில் அவை இல்லை என்றால் அதற்கு திராவிட அரசுதான் காரணம் என்பதை அனைவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.” என்று கூறினார்.