திமுக ஆட்சியில் உரிமைக்காகப் போராடிய விவசாயிகள், ஆசிரியர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் வாபஸ்

 
vijay

மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரையிலான காலகட்டத்தில், தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி அமைதியான முறையில் போராட்டத்தில் ஈடுபட்ட 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது பதிவு செய்யப்பட்ட 600 வழக்குகளைத் திரும்பப் பெற தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்பிற்கிணங்க கடந்த ஆட்சிக் காலத்தில், மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடியதால் அவர்கள் மீது பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெற்று ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 02.09.2026 அன்று தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில், பேரவை விதி 110-ன் கீழ் விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் தங்களது கோரிக்கைகளுக்காக அமைதியான முறையில் போராடிய போது அவர்கள் மீது கடந்த ஆட்சிக் காலங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள் திரும்ப பெறப்படும் என அறிவித்தார்கள். மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மே 2021 முதல் ஏப்ரல் 2026 வரை விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் மீது போடப்பட்ட 600 வழக்குகள் கண்டறிப்பட்டன. அவற்றைத் திரும்ப பெற உரிய சட்ட விதிகளின்படி ஆய்வு செய்து இவ்வழக்குகளில் பதிவு செய்யப்பட்ட சுமார் 92,000-க்கும் மேற்பட்ட விவசாயிகள் மற்றும் ஆசிரியர்கள் அவ்வழக்குகளில் இருந்து விடுவித்து ஆணை வெளியிடப்பட்டுள்ளது" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.