புகார் அளித்த அதே நாளில் தவெக எம். எல். ஏ. மீது வழக்குப்பதிவு! விசாரணைக்கு பின் கைது- காவல்துறை விளக்கம்

 
புகார் அளித்த அதே நாளில் தவெக எம். எல். ஏ. மீது வழக்குப்பதிவு! விசாரணைக்கு பின் கைது- காவல்துறை விளக்கம் 

கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது என காவல்துறை தெரிவித்துள்ளது. 

s

இதுதொடர்பாக காவல்துறை தனது எக்ஸ் தளத்தில், "23.11.2026 அன்று, கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்த மூத்த பெண் அதிகாரி, கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் மீது துன்புறுத்தல் மற்றும் முறையற்ற நடத்தை தொடர்பாகப் புகார் அளித்தார். இதன் அடிப்படையில், அதே நாளில் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் (AWPS) குற்ற எண் 91/2026-ன் கீழ் உரிய சட்டப்பிரிவுகளின்படி வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தொடக்கத்தில் உள்ளூர் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர். பின்னர், சென்னை உயர் நீதிமன்றம் WP (Crl) No. 3183/2026 வழக்கில் 24.11.2026 அன்று பிறப்பித்த உத்தரவின்படி, திருப்பூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி. ஸ்ரிஷ்டி சிங், IPS அவர்கள், சென்னை நிர்வாகப் பிரிவு காவல்துறைத் தலைவர் (IGP) திருமதி. என். காமினி, IPS அவர்களின் மேற்பார்வையில் இவ்வழக்கின் விசாரணையை மேற்கொண்டார்.

விசாரணையின்போது, புகார்தாரர் மற்றும் பிற சாட்சிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, குற்றச்சாட்டுக்கு உள்ளான கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் திரு. சி. அருள் விக்னேஷ் கைது செய்யப்பட்டார். இவ்வழக்கின் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. இந்தச் சம்பவம் தொடர்பாக, உள்ளூர் காவல்துறையினர் மற்றும் தமிழ்நாடு காவல்துறையின் சைபர் குற்றப்பிரிவினர் இணைந்து இதுவரை 201 சமூக ஊடகப் பதிவுகளை நீக்கியுள்ளனர். மேலும், POSH சட்டத்தின் கீழ் வரும் விவரங்கள் தொடர்பாக எந்தவொரு தகவலையும் வெளியிடவோ, பகிரவோ அல்லது பொதுமக்களுக்குத் தெரியப்படுத்தவோ கூடாது என மாண்புமிகு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனவே, நீதிமன்றத்தின் மேற்கண்ட உத்தரவுக்கு முரணாக எந்தவொரு பதிவையும் சமூக ஊடகங்களில் வெளியிடுவதைத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது." எனக் குறிப்பிட்டுள்ளது.