அரசு மூத்த பெண் அதிகாரி கொடுத்த புகார் - திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது வழக்குப்பதிவு
தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்க பெண் அதிகாரியை மிரட்டியதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் திட்ட அலுவல பெண் அதிகாரியை மிரட்டியதாக ரிஷிவந்தியம் தொகுதி திமுக எம்எல்ஏ வசந்தம் கார்த்திகேயன் மீது போலீஸ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பெண்ணை அவமதிக்கும் நோக்கில் பேசுதல் உள்ளிட்ட நான்கு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து தியாகதுருகம் போலீசார் விசாரணை செய்துவருகின்றனர்.
புகாரின் பின்னணி என்ன?
கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் ஊராட்சி ஒன்றியத்தில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் கீழ் பெண் பணியாளர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக இந்தப் பிரச்சினை உருவானதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. அந்தப் பெண் பணியாளர், தன்னை வட்டார வளர்ச்சி அலுவலர் திட்டியதாக வசந்தம் கார்த்திகேயனிடம் முறையிட்டதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, அந்த விவகாரம் தொடர்பாக வட்டார வளர்ச்சி அலுவலரை வசந்தம் கார்த்திகேயன் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகப் புகார் தெரிவிக்கிறது.
புகார் கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவலின்படி, கடந்த 2026 அக்டோபர் 18ஆம் தேதி இரவு 8.32 மணிக்கு வசந்தம் கார்த்திகேயன் பெண் வட்டார வளர்ச்சி அலுவலரைத் தொலைபேசியில் தொடர்புகொண்டதாகக் கூறப்படுகிறது. அப்போது பெண் அதிகாரியிடம் மரியாதையற்ற வகையில் பேசியதுடன், மிரட்டும் தொனியிலும் பேசியதாக அவர் தனது புகாரில் குற்றம்சாட்டியுள்ளார்.

