நெய்வேலி வன்முறை - அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப் பதிவு

 
PMK PMK

நெய்வேலி வன்முறை சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்.எல்.சி நிறுவனம் விரிவாக்கத்திற்காக விளைநிலங்களை கையகப்படுத்துவதை கண்டித்து நெய்வேலியில் என்எல்சிக்கு எதிராக நேற்று பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் பாமகவினர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.  இந்த போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்துகொண்டு என்.எல்.சி நிறுவனத்திற்கு எதிராக கோஷங்களை எழுப்பினர். அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்ட பாமக தலைவர் அன்புமணி ராமதாஸை போலீசார் கைது செய்தனர்.  அன்புமணி ராமதாஸ் கைது செய்யப்பட்டதை கண்டித்து பாமகவினர் போலீஸ் வாகனத்தை அடித்து நொறுக்கினர்.  இதனை தொடர்ந்து போலீசார் தடியடி நடத்தி போராட்டக்காரர்களை கலைத்தனர். பதிலுக்கு பாமகவினர் போலீசார் மீது கல்வீசி தாக்குதல் நடத்திய நிலையில்,  காவல்துறையினர் வானத்தை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். வானத்தை நோக்கி 3 முறை துப்பாக்கிச்சூடு நடத்தியும் தண்ணீர் பீய்ச்சியும் காவல்துறையினர் கூட்டத்தை கலைத்தனர். 

anbumani

இந்த நிலையில், நெய்வேலி வன்முறை சம்பவம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் உள்ளிட்ட 3000 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் மற்றும் முக்கிய நிர்வாகிகள் மீது இரண்டு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. வன்முறையில் ஈடுபட்டதாக கைது செய்யப்பட்டவர்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளனர்.