திமுக-நாம் தமிழர் கட்சியினர் மோதல் - இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு

 
dmk ntk clash

ஈரோடு மாவட்டம் வீரப்பசத்திரத்தில் வேட்பாளர் மேனகாவுடன் சீமான் பங்கேற்ற பரப்புரையில் ஏற்பட்ட கல்வீச்சு சம்பவம் தொடர்பாக இருதரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த திருமகன் ஈ.வெ.ரா. மாரடைப்பால் மரணம் அடைந்ததை தொடர்ந்து அந்த தொகுதிக்கு வருகிற 27ம் தேதி இடைத்தேர்தல் நடத்தப்படவுள்ளது. திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார். அதிமுக கூட்டணி சார்பில் ஈபிஎஸ் தரப்பு வேட்பாளர் தென்னரசு போட்டியிடுகிறார். இதேபோல் தேமுதிக மற்றும் நாம் தமிழர் கட்சியும் போட்டியிடுகிறது. இடைத்தேர்தலில் மொத்தம் 77 வேட்பாளர்கள் போட்டியிடுவதாக தேர்தல் நடத்தும் அலுவலர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். காங்கிரஸ் கட்சிக்கு கை சின்னமும், அதிமுக வேட்பாளருக்கு இரட்டை இலை சின்னமும், தேமுதிக வேட்பாளருக்கு முரசு சின்னமும் வழங்கப்பட்டுள்ளது. இடைத்தேர்தலை முன்னிட்டு அனைத்து கட்சிகளும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் வீரப்பசத்திரத்தில் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் மேனகாவை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பரப்புரை மேற்கொண்டிருந்தார். அப்போது திமுக -நாம் தமிழர் கட்சி தொண்டர்களுக்கு இடையே ஏற்பட்ட தகராறில் ஒருவரை ஒருவர் தாக்கி கொண்டனர். இந்த மோதலில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த 4 பேர், திமுகவை சேர்ந்த 4 பேர், மற்றும் 3 போலீசார் உள்ளிட்ட 11 பேர் காயமடைந்தனர். மோதலையடுத்து அந்த பகுதியில் துணை ராணுவப் படையினர், போலீசார் குவிக்கப்பட்டனர். இந்த நிலையில் திமுக-நாம் தமிழர் கட்சியினர் இடையே நடந்த மோதல் விவகாரத்தில் இரு தரப்பினர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. மோதலில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இரு கட்சியினரும் அளித்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.