அதிமுக முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு..

 
அதிமுகவுக்கு எதிராக மாறிய பாஜக : கலக்கத்தில் வைத்திலிங்கம்

கடந்த அதிமுக ஆட்சியில் ரூ.27.9 கோடி லஞ்சம் பெற்றதாக அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.வைத்திலிங்கம் மற்றும்  அவரது இரு மகன்கள் உள்பட 11 பேர் மீது லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  

தமிழகத்தில் கடந்த 2011 - 2016 வரையிலான அதிமுக ஆட்சிக்காலத்தில் தமிழக வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சராக இருந்தவர் வைத்திலிங்கம். தற்போது முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவாளராக இருக்கும் வைத்திலிங்கம், தஞ்சாவூர் மாவட்டம் ஓரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்து வருகிறார்.  இவர் கடந்த அதிமுக ஆட்சியில் சென்னை பெருங்களத்தூரில் அடுக்குமாடி குடியிருப்புகள் கட்டுமானத்திற்கு அனுமதி வழங்க கோடிக்கணக்கான ரூபாய் லஞ்சம் பெற்றதாக  அறப்போர் இயக்கம் குற்றம் சாட்டியுள்ளது.  

சென்னை பெருங்களத்தூரில் ஸ்ரீராம் குழுமத்துக்கு சொந்தமான ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் என்ற நிறுவனம் 57.94 ஏக்கர் நிலத்தில் 24 பிளாக்குகளாக 1,453 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்புகளை கட்ட திட்ட அனுமதி கேட்டு சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தில் (சிஎம்டிஏ) கடந்த 2013ஆம் ஆண்டு விண்ணப்பித்தது. ஆனால் அந்த திட்டத்துக்கு 2 ஆண்டுகளுக்கு மேலாக அனுமதி வழங்காத நிலையில், கடந்த 2016 ஆம் ஆண்டு திடீரென அனுமதி வழங்கப்பட்டதாக குறிப்பிட்டுள்ளது.  

  வைத்திலிங்கம்

ரூ. 27.9 கோடி லஞ்சமாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தங்களுக்கு கிடைத்த லஞ்ச பணத்தை பயன்படுத்தி வைத்திலிங்கமும், அவரது மகன்களும் திருச்சிராப்பள்ளி பாப்பகுறிச்சியில் ரூ.24 கோடி மதிப்புள்ள 4.5 ஏக்கர் நிலத்தை வாங்கியுள்ளதாகவும், இதேபோல லஞ்ச பணம் கிடைத்த காலக்கட்டத்தில் பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை அடுத்தடுத்து வாங்கியிருப்பதாகவும் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ளது.   இப்புகாரின் அடிப்படையில் லஞ்ச ஒழிப்புத் துறையினர் விசாரணை செய்து வந்தனர்.  

 புகாரில் உண்மை இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, முன்னாள் அமைச்சர் வைத்திலிங்கம் மீது  சென்னை லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.  மேலும், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவன இயக்குநர் கே.ஆர்.ரமேஷ், வைத்திலிங்கத்தின் மகன்கள் பிரபு, சண்முக பிரபு, உறவினர் பன்னீர்செல்வம், முத்தம்மாள் நிறுவனம், ஸ்ரீராம் பிராபர்ட்டீஸ் அன்ட் இன்ப்ராட்சர் பிரைவெட் லிமிடெட் நிறுவனம், பாரத் நிறுவனம் உள்ளிட்ட 11 பேர் மீது ஊழல் தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 சட்டங்களின் கீழ் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்தனர்.  விரைவில் விசாரணை தொடங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.