திமுக ஆதரவாளர் பொன்ராஜ் மீது பாய்ந்தது வழக்கு..!
அரசியல் விமர்சகராகவும், ஊடக விவாதங்களில் திமுக ஆதரவு பேச்சாளராகவும் அறியப்படுபவர் பொன்ராஜ். இந்திய ஜனநாயக மீட்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளராகவும் செயல்பட்டு வருகிறார்.
சட்டசபை தேர்தலுக்கு முன்பாக இவர், தவெகவின் பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாகவும், சர்ச்சைக்குரிய வகையிலும் பேசியதாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இதுகுறித்து, தேர்தலுக்கு முன்னதாக, சென்னை டிஜிபி அலுவலகத்தில் தவெக தலைவர் விஜய் நேரில் சென்று புகார் அளித்தார். பொன்ராஜ் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் கோரியிருந்தார்.
இதையடுத்து, தனது பேச்சு தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாக கூறி பொன்ராஜ் மன்னிப்பும் கோரினார். அதேநேரத்தில், தவெகவினர் தமக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி, விஜய் மீது பொன்ராஜ் சென்னை போலீஸ் கமிஷனரிடம் புகார் அளித்தார்.
இந்நிலையில், தவெக பெண் தொண்டர்கள் பற்றி அவதூறாக பேசியதாக பொன்ராஜ் மீது தவெக நிர்வாகிகள் புகார் அளித்து இருந்தனர். அதன் அடிப்படையில் கடலூர் புதுநகர் போலீஸ் ஸ்டேஷனில் பொன்ராஜ் மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இதேபோல சென்னையிலும் அவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது.

