அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக அ.தி.மு.க., வளர்மதி கணவர் மீது வழக்கு..!!
சட்டசபை தேர்தலில், சென்னை ஆயிரம் விளக்கு தொகுதியில், அ.தி.மு.க., வேட்பாளராக, முன்னாள் அமைச்சர் வளர்மதி போட்டியிட்டார்.
ஓட்டுப்பதிவு நடந்த நேற்று முன்தினம், ஆயிரம் விளக்கு தொகுதியில், தி.மு.க.,வினர் விதிகளை மீறி வாக்காளர்களுக்கு பணம் கொடுக்க, டோக்கன் வழங்கி வருவதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதையடுத்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, வளர்மதியின் கணவர் பாலசுப்பிரமணியன், 79, திடீரென அ.தி.மு.க., கொடியுடன், சென்னை வள்ளுவர் கோட்டம் சந்திப்பு அருகே சாலையில் அமர்ந்து, போராட்டத்தில் ஈடுபட்டார்.
போலீசார் அவரை தடுத்தனர். இதனால், அவர் சாலையில் படுத்து போராட்டத்தில் ஈடுட்டார். அவரை குண்டுக்கட்டாக துாக்கி அப்புறப்படுத்தினர். அப்போது போலீசாருடன், பாலசுப்பிரமணியன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். போலீசாரை ஆபாசமாக பேசியதாகவும் கூறப் படுகிறது. இச்சம்பவம் தொடர்பாக, பாலசுப்பிரமணியன் மீது, அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட சட்ட பிரிவுகளின் கீழ், நுங்கம்பாக்கம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
இதற்கிடையே, போலீசார் தன்னை தாக்கியதாக கூறி, சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில், பாலசுப்பிரமணியன் சிகிச்சை பெற்றுள்ளார்.

