சீமான் உள்ளிட்ட நாதகவினர் 181 பேர் மீது வழக்குப் பதிவு!

வீட்டில் உருட்டுக்கட்டையோடு கூட்டத்தை கூட்டியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கடந்த சில நாட்களுக்கு முன்னர் செய்தியாளர் சந்திப்பின் போது பெரியார் குறித்து அவதூறாக பேசியதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக பெரியார் அமைப்பை சேர்ந்தவர்கள் மற்றும் திமுக சார்பில் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகார் தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், போலீசார் விசாரித்து வருகின்றனர். மேலும் சீமானின் இந்த பேச்சுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். சீமானின் பேச்சை கண்டித்து அவரது வீட்டை பெரியார் அமைப்பினர் முற்றுகையிட முயன்ற நிலையில், அவர்களை தடுத்த நிறுத்த சீமான் வீட்டில் அவரது கட்சியினர் குவிந்தனர்.
இந்த நிலையில், வீட்டில் உருட்டுக்கட்டையோடு கூட்டத்தை கூட்டியதாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்ட 181 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை நீலாங்கரையில், சட்டவிரோதமாக வீட்டில் உருட்டுக்கட்டைகளுடன் கூடியதாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சீமான் உட்பட அக்கட்சி நிர்வாகிகள் 181 பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.