குடிவெறியில் சிறுவர்களை தாக்கிய பாடகர் மனோவின் மகன்கள்
கல்லூரி மாணவர், சிறுவன் மீது தாக்குதல் நடத்தியதாக பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, சாஹிர் மீது சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
மதுபோதையில் 16 வயது சிறுவன் உள்ளிட்ட இருவர் தாக்கப்பட்ட விவகாரத்தில் பாடகர் மனோவின் மகன்கள் ரஃபி, சாஹிர் மீது சென்னை வளசரவாக்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர்கள் மீது கொலை மிரட்டல், தாக்குதல் நடத்துதல், ஆபாசமாக பேசுதல் உள்ளிட்ட 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. தலைமறைவாக உள்ள இருவருக்கும் போலீசார் வலைவீசி வருகின்றனர்.
நேற்றிரவு ஸ்ரீதேவி குப்பம் பகுதியில் குடிபோதையில் கிருபாகரன் மற்றும் மதுரவாயிலை சேர்ந்த 16 வயது சிறுவனை தாக்கியதாக புகார் எழுந்துள்ளது. இதில் கிருபாகரனுக்கு தலையிலும், 16 வயது சிறுவனுக்கு உடலின் பல இடங்களிலும் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து வளசரவாக்கத்தில் உள்ள மனோவின் வீட்டிற்கு சென்ற போலீசார், நேரில் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.