தடையை மீறி போராட்டம்- அதிமுகவினர் மீது வழக்குபதிவு

 
eps

அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிசாமி மீது பதியப்பட்டுள்ள வழக்கை கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட அதிமுக முன்னாள் எம்.பி உட்பட 60 பேர் மீது போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர். 

மதுரை அவனியாபுரம் பகுதியில் அமமுக பிரமுகர் தாக்கப்பட்டது தொடர்பாக அதிமுக இடைக்கால பொதுசெயலாளர் எடப்பாடி பழனிச்சாமி உட்பட 5 பேர் மீது 6 பிரிவுகளின் கீழ் அவனியாபுரம் போலீசாரால் வழக்குபதிவு செய்யப்பட்டது. எடப்பாடி பழனிசாமி மீது வழக்குபதிவு செய்த அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் அதிமுக சார்பில் நேற்று போராட்டம் நடைபெற்றது. 

சென்னை ராயப்பேட்டை லாயிட்ஸ் சாலை ஜங்ஷனில் முன்னாள் எம்பி ஜெயவர்தன், ஒன்றிய செயலாளர் ராஜசேகர் உட்பட 60க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கோஷமிட்டப்படியே ஊர்வலமாக சென்று சாலை மறியலில் ஈடுபட்டனர். சிறிது நேரத்திற்கு பின்னர் கலைந்து சென்றனர்.  இந்த நிலையில் அனுமதியின்றி சாலை மறியில் ஈடுபட்டதாக முன்னாள் எம்.பி ஜெயவர்தன், முன்னாள் கவுன்சிலர் சிவராஜ், மயிலாப்பூர் விஜயபாஸ்கர், மூவேந்தர் உட்பட 60 அதிமுகவினர் மீது இரு பிரிவுகளின் கீழ் ராயப்பேட்டை போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.  சட்டவிரோதமாக கூடுதல், மாநகர காவல் சட்டம் ஆகிய இரு பிரிவின் கீழ் போலீசார் வழக்குபதிவு செய்துள்ளனர்.