பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி வழக்கு!

பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
திமுக நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் பொன்முடி, வைணவம் மற்றும் சைவம் குறித்தும் விலைமாதுகள் குறித்தும் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பொன்முடியின் இந்த கருத்துக்கு பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சியினர் கடும் கண்டனம் தெரிவித்தனர். அமைச்சர் பொன்முடியின் பேச்சுக்கு திமுக எம்.பி கனிமொழியும் கண்டனம் தெரிவித்து இருந்தார். இதனையடுத்து திமுக துணை பொதுச் செயலாளர் பொறுப்பில் இருந்து பொன்முடி விடுவிக்கப்பட்டார். இதனையடுத்து தனது பேச்சுக்கு வருத்தம் தெரிவிப்பதாக அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார்.
இந்த நிலையில், பொன்முடியை அமைச்சர் பதவியில் இருந்து நீக்கக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. பொன்முடியை அமைச்சர் பதவியில் நீக்கக் கோரி வழக்கறிஞர் பி.ஜெகன்நாத் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். மக்கள் பிரதிநிதி என்ற முறையில், அமைச்சர் பொன்முடியின் பேச்சு, அரசியல் சாசனத்திற்கு எதிரானது. மக்கள் பிரதிநிதி என்ற அடிப்படையில் அனைத்து மக்களையும் பாதுகாக்கும் பொறுப்பு பொன்முடிக்கு உள்ளது. அமைச்சர் பொன்முடி மீது புகாரளித்தும் காவல்துறை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.