ரூ.800 கோடி மதிப்புள்ள சொத்துகள் மோசடி - அதிமுக நிர்வாகி உட்பட 12 பேர் மீது வழக்குப்பதிவு

 
அ அ

சிங்கப்பூரை சேர்ந்த மூதாட்டியின் சொத்துக்களை, போலி ஆவணங்கள் மூலம் மோசடி செய்த, அ.தி.மு.க., நிர்வாகி செந்தில் என்கிற செந்தில்குமார் உட்பட 12 பேர் மீது குற்றப்பிரிவு போலீசார் வழக்குப்பதிந்துள்ளனர். 

சிங்கப்பூரை சேர்ந்த ஷேக் சிராஜூதீன். தொழிலாதிபரான இவருக்கு தஞ்சாவூர் நாஞ்சிக்கோட்டை, சீராஜ்பூர் நகர், செங்கிப்பட்டி பகுதிகளில் சொத்துக்கள் இருந்தன. இந்நிலையில், கடந்த 2015ம் ஆண்டு ஷேக் சிராஜூதீன் இறந்தார். பிறகு, இவரது மனைவி   76 வயது முகமதா பேகம், என்பவரிடம், தஞ்சாவூரை சேர்ந்த ஸ்ரீவித்யாசுமதி என்பவர், தங்களின் சொத்துக்களை பராமரித்து, பாதுகாத்து தருவதாக, நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளார். இதை நம்பி அவரிடம் முகமதா பேகம் பொறுப்பை ஒப்படைத்தார். பிறகு, ஸ்ரீவித்யாசுமதி தனக்கு அறிமுகமான, தஞ்சாவூரை சேர்ந்த அ.தி.மு.க., மத்திய மாவட்ட அம்மா பேரவையின் மாவட்ட தலைவரான கேபிள் செந்தில் (எ) செந்தில்குமார் உள்ளிட்ட சிலர் மூலம், முகமதா பேகத்திடம், கடந்த 2017ம் ஆண்டு முதல் 2022ம் ஆண்டு வரை, போலியான பவர் ஆஃப் அட்டார்னி, விற்பனை பத்திரங்கள்,  உள்ளிட்ட ஆவணங்களை தயார் செய்து, பல்வேறு கையெழுத்து வாங்கியுள்ளனர். மேலும், செங்கிப்பட்டி, சிராஜ்பூர் பகுதியில் பெட்ரோல் பங்கு இடத்தினை, செந்தில்குமார் தனது உறவினரான ரேவதி, மணிகண்டன், ஆதித்யா, கவிதா, சுஜாதா ஆகியோருக்கு விற்பனை செய்யதுள்ளார்.

அத்துடன் சென்னை ஆழ்வார்பேட்டை மற்றும் நாஞ்சிக்கோட்டை பகுதியில், சிராஜூதீனுக்கு சொந்தமான இடத்தினையும், அவர் அன்பளிப்பாக வழங்கி விட்டதாக போலியான ஆவணங்களை தயார் செய்து அபகரித்தனர். மேலும், மூன்று வங்கிகளில் முகமதாபேகம் பெயரில், கணக்கு துவங்கி பணம் பரிவர்த்தனை செய்துள்ளனர். கடந்த சில மாதங்களுக்கு முன்பு, சிராஜூதீன் வீட்டினை உடைத்து, அங்கிருந்த ஆவணங்கள், நான்கு டூ வீலர்கள், இரண்டு நான்கு வாகனங்கள், பணம், நகைகளையும் திருடியுள்ளனர்.  இதுகுறித்து தகவலறிந்த முகமதா பேகம், செந்தில்குமார் உள்ளிட்டோரிடம் கேட்டுள்ளார். ஆனால், முறையான பதில் அளிக்காமல், அவரை கொலை செய்து விடுவதாக மிரட்டியுள்ளனர். வயது மூப்பு காரணமாக முகமதா பேகம் அமைதியாக இருந்துள்ளார். இருப்பினும், அவரது குடும்ப உறுப்பினர்கள் அளித்த தைரியத்தின் பேரில், போலி ஆவணங்கள் மூலம் சுமார் 800 கோடி ரூபாய் மதிப்பிலான இடத்தை அபகரித்தாக செந்தில்குமார், பிரகாஷ், ரேவதி,பாஸ்கரன்,நாகராஜன், பெட்ரிஷியா ஜோனி, ஸ்ரீவித்யாசுமதி, செல்லப்பன்,மணிகண்டன், ஆதித்யா,கவிதா,சுஜாதா ஆகியோர் மீது, தஞ்சாவூர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், போலீசார் ஒன்பது பிரிவுகளில், வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.