விருத்தாச்சலம் அருகே தாறுமாறாக ஓடிய கார் - 2 பேர் பலி

 
vipah

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அருகே சாலையில் தாறுமாறாக ஒடிய சொகுசு கார், கட்டுப்பாட்டை இழந்து, சாலையோரத்தில் நின்ற மூன்று பேர் மீது மோதியதில் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அடுத்த கீணனூர் அம்பேத்கர் நகர் கிராமத்தில் பேருந்திற்காக பயணிகள் பேருந்து நிறுத்தம் முன்பு காத்திருந்தனர். அப்போது விருத்தாச்சலத்தில் இருந்து, சிதம்பரம் நோக்கி அதிவேகமாக வந்து கொண்டிருந்த, கர்நாடக மாநில பதிவு எண் கொண்ட கருப்பு கலர் சொகுசு காரனது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையில் தாறுமாறாக வந்துள்ளது. அப்போது பேருந்து நிறுத்தத்தில் காத்திருந்த பயணிகள் மீது மோதாமல் இருக்க, கார் டிரைவர் வேகமாக வளைக்கவே, எதிர்ப்புறம் சாலை ஓரத்தில் நின்றிருந்த இரண்டு பெண், ஒரு ஆண் உட்பட மூவரும் மீது மோதி தூக்கி வீசிவிட்டு, சாலை ஓரத்தில் இருந்த வடிகால் வாய்க்காலில் சிக்கி நின்றுள்ளது.

இந்நிலையில் தூக்கி வீசப்பட்ட மூன்று பேரில், கீணனூர் அம்பேத்கர் நகரை சேர்ந்த  செந்தில்குமார் (வயது 39) மற்றும் அதே பகுதியை சேர்ந்த  செல்வி (வயது 55) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தனர். மேலும் விபத்தில சிக்கிய  சிலம்பரசி ( வயது 21) என்பவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு விருத்தாச்சலம் அரசு மருத்துவமனையில் ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். இதுகுறித்து தகவல் அறிந்த கம்மாபுரம் காவல் துறையினர், வருகை புரிந்து,  விபத்தில் உயிரிழந்த இரண்டு நபர்களின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக விருத்தாச்சலம் அரச மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து கம்மாபுரம் காவல்துறையினர் வழக்கு பதிந்து, காரில் இருந்தவர்களை மீட்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அடிக்கடி விபத்து ஏற்படுவதால் அப்பகுதி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் காவல் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்னர் அவர்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர். இதனால் விருத்தாசலம்- சிதம்பரம் சாலையில் அரை மணி நேரம்  போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.