வேனும் காரும் நேருக்கு நேர் மோதி விபத்து- 4 பேர் பலி
தேவகோட்டை அருகே சுற்றுலா வாகனமும் காரும் நேருக்கு நேர் மோதிய விபத்தில் 4 பேர் பலியாகினர்.
மலேசிய நாட்டில் இருந்து ஆன்மிக சுற்றுலா வந்த 12 பேர் ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் இருந்து திருச்சிக்கு டெம்போ வேனில் சென்றனர். வேனை மதுரையைச் சேர்ந்த ஓட்டுநர் கந்தையா (40) ஓட்டினார். அதே சமயத்தில் தஞ்சாவூர் காந்தி நகர் பகுதியில் வசித்து டீக்கடை நடத்தி வரும் பவுல் டேனியல் (38) , அவரது மகள்கள் சூசன்ரெகுமா (10), ஹெலன் சாமா (7) , சித்தப்பா மைக்கேல் (63) ஆகிய 4 பேர் உறவினர் விசேஷத்துக்காக காரில் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே ஆண்டாஊரணிக்கு வந்தனர். காரை பவுல் டேனியல் ஓட்டினார். தேவகோட்டை அருகே மார்க்கண்டேயன்பட்டி ஆற்றுப் பாலம் அருகே டெம்போ வேன் மீது கார் நேருக்குநேர் மோதியது.
தேவகோட்டை அருகே விபத்தில் 4 பேர் பலி pic.twitter.com/zwmDs9R7iI
— way2news_local (@Way2news_local) September 14, 2024
இதில் காரில் இருந்த 4 பேர், வேனில் இருந்த ஓட்டுநர் மற்றும் 9 மலேசிய நாட்டினர் காயமடைந்தனர். கிராம மக்கள் அவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் தேவகோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்தில் சம்பவ இடத்திலேயே பவுல் டேனியல் (38) , சூசன் ரெகுமா (10), ஹெலன் சாமா (7) , மைக்கேல் (63) ஆகிய 4 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த மலேசியா நாட்டினர் தேவகோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.சம்பவம் குறித்து தேவகோட்டை தாலுகா போலீஸார் விசாரித்து வருகின்றனர்.