தூக்க கலக்கத்தில் சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த கார் - இரு சிறுமிகள் பலி

 
Accident

ராணிப்பேட்டை மாவட்டம் சிப்காட் அடுத்த பெல் அருகே சாலையோர பள்ளத்தில் கார் கவிழ்ந்ததில் இரு சிறுமிகள் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

2 minors death road accident in ranipet district

சென்னை வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்தவர் முகமது சலீம். இவர் அதே பகுதியில் சிக்கன் விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார். இவரது உறவினர் ஆந்திராவில் இறந்துவிட்டதாக தெரிகிறது. இதனால் அங்கு செல்வதற்காக உறவினர்களுடன் காரில் சென்றுள்ளார். ஆந்திர மாநிலம் அனந்தபூர் பகுதியில் நடைபெற்ற துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சென்னை திரும்பியபோது, சிப்காட் அருகே பெல் சாலையில் வந்துகொண்டிருந்த கார் பள்ளத்தில் கவிழ்ந்தது. கார் ஓட்டுநர் தூக்க கலகத்தில் இருந்ததே கார் கட்டுப்பாட்டை இழந்ததற்கு  காரணம் எனக் கூறப்படுகிறது.

இந்த விபத்தில் காரில் பயணித்த சுமையா பாத்திமா(17), தபாசம் பாத்திமா(15) ஆகிய இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.மேலும் காரில் பயணித்த மூன்று பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் வாலாஜாபேட்டை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் விபத்து குறித்து சிப்காட் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

துக்க நிகழ்வில் பங்கேற்று விட்டு மீண்டும் சொந்த ஊருக்கு திரும்பிய போது, கார் பள்ளத்தில் கவிழ்ந்து இரு சிறுமிகள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.