இனி சவுக்கு சங்கர் எக்ஸ்-ல் பேச முடியாதா? - அக்கவுண்ட்டை முடக்க போலீஸ் உத்தரவு..!
சென்னை தெற்கு மண்டல சைபர் கிரைம் காவல்துறையினர், அமெரிக்காவின் டெலாவேர் மாகாணத்தை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) நிறுவனத்திற்கு அதிகாரப்பூர்வ கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளனர்.
கடந்த மார்ச் 28, 2026 அன்று அனுப்பப்பட்ட இந்த நோட்டீஸில், சவுக்கு சங்கரின் '@SavukkuOfficial' என்ற எக்ஸ் தளத்தை உடனடியாக முடக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) பிரிவு 94-ன் கீழ் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று முக்கிய குற்ற வழக்கு எண்களை (Cr. No: 17/2025, 22/2025, 29/2025) சுட்டிக்காட்டியுள்ள காவல்துறையினர், அவர் தற்போது தலைமறைவாக இருப்பதாகவும், இருப்பினும் தனது எக்ஸ் தளம் வாயிலாக தொடர்ந்து வழக்குகளின் முன்னேற்றங்களைக் கண்காணித்து வருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2026/04/01/hezpu0macaawzxx-2026-04-01-18-41-48.jpg)
குறிப்பாக, சவுக்கு சங்கர் தனது பக்கத்தில் பதிவிட்டிருந்த மூன்று குறிப்பிட்ட பதிவுகளின் (URL) இணைப்புகளைக் கொடுத்துள்ள சைபர் கிரைம் பிரிவு, அந்தப் பதிவுகள் சட்டவிரோதமானவை என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், புலனாய்வுப் பணிகளுக்காக கடந்த ஜனவரி 1, 2026 முதல் மார்ச் 25, 2026 வரையிலான காலக்கட்டத்திற்குரிய ஐபி லாக் (IP Log) விவரங்கள், கணக்கைத் தொடங்கும் போது பயன்படுத்தப்பட்ட மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி, மீட்பு மின்னஞ்சல் (Recovery Email) மற்றும் அந்த தளம் பயன்படுத்தப்பட்ட சாதனங்களின் ஐஎம்இஐ (IMEI) எண்கள் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்பத் தரவுகளையும் வழங்க வேண்டும் என எக்ஸ் நிறுவனத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
சட்டவிரோதச் செயல்களைத் தடுக்கவும், தற்போதைய குற்றவியல் விசாரணையைத் தடையின்றி முன்னெடுக்கவும் இந்தத் தரவுகள் அவசியம் என சென்னை காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. சவுக்கு சங்கர் மீது ஏற்கனவே அவதூறு மற்றும் மிரட்டல் தொடர்பான புகார்கள் இருக்கும் நிலையில், தற்போது எக்ஸ் நிறுவனத்திற்கு இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

