10 ரூபாய் நாணயங்களுடன் வந்த வேட்பாளர்..!

 
1

தென் சென்னை தொகுதியில் போட்டியிடும் சுயேச்சை வேட்பாளர் தேர்தல் வைப்புத் தொகையாக செலுத்த வேண்டிய ரூ.25,000க்கு பத்து ரூபாய் மதிப்புள்ள நாணயங்களுடன் வந்திருந்தார்.

ஜெயராமன் என்ற அந்த வேட்பாளர் ’கடவுள் எனும் முதலாளி கண்டெத்த தொழிலாளி’ என்ற திரைப்பாடலை ஒலித்தபடி, வேட்புமனுவைத் தாக்கல் செய்ய தமது இருசக்கர வாகனத்தில் வந்திருந்தார்.

மேலும், மேல் சட்டை அணியாமல் வந்திருந்த அவரிடம், சத்தமாக ஒலித்த பாடலை நிறுத்தும்படி காவல்துறையினர் எச்சரித்தனர்.

இதையடுத்து, ரூ.25,000 மதிப்புள்ள பத்து ரூபாய் நாணயங்களுடன் வேட்பு மனுத் தாக்கல் செய்ய சென்றார் ஜெயராமன். எனினும் தேர்தல் நடத்தும் அலுவலர் எழுந்து நின்று தனது வேட்பு மனுவை வாங்க மறுத்ததால் மனுத்தாக்கல் செய்யாமல் திரும்பிச் சென்றார்.

இவர் ஏற்கெனவே எட்டு சட்டப்பேரவை தொகுதியில் போட்டியிட்டு தோல்வி கண்டவர்.

இதே போல், திருச்சியில் உறையூர் பகுதியை சேர்ந்த ஓய்வு பெற்ற போக்குவரத்து ஊழியர் ராஜேந்திரன் என்பவர், வேட்பு மனு தாக்கல் செய்ய வந்தார்.. வெறும் ஆதார் அட்டைகளையும், வாக்காளர் அட்டைகளையும் கழுத்தில் மாலையாக மாட்டிக் கொண்டு, வந்து கலெக்டர் பிரதீப் குமாரிடம் வேட்பு மனு தாக்கல் செய்தார்.டிஜிட்டல் இந்தியாவில் வேட்பாளர்கள் பணம் செலுத்த டிஜிட்டல் முறையை நடைமுறைப்படுத்த வேண்டும் என்று சொல்லிக் கொண்டே, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, ஓட்டுநர் உரிமம், ஏடிஎம் கார்டுகள் இப்படி எல்லா கார்டுகளையும் கழுத்தில் மாலையாக அணிந்து வந்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

அதுபோலவே, மதுரையில் ஒரு சுயேச்சை வேட்பாளர் சங்கரபாண்டியன் என்பவர், ஓட்டுக்கு பணம் பெற்று வாக்களிப்பதற்கும், பணம் கொடுத்து வாக்கு பெறுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், தூக்கு கயிறை கழுத்தில் தொங்கவிட்டபடியே வந்து, வேட்புமனு தாக்கல் செய்தார்..ஆனால், 100 மீட்டர் தூரத்திற்கு முன்பாகவே போலீசார் அவரிடம் இருந்த கயிறு, பதாகைகளை பறிமுதல் செய்து, அவரை முழுவதுமாக சோதனை செய்து, அதற்கு பிறகே வேட்புமனு தாக்கல் செய்ய அனுமதித்தனர்.

அதுபோலவே, பொள்ளாச்சி தொகுதியில் ஒருவர், வேட்பு மனு தாக்கல் செய்து மொத்த பேரையும் கிறுகிறுக்க செய்துள்ளார்.. இந்த வேட்பாளர் பெயர் பெஞ்சமின் பிரபாகர்.. பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் வேட்புமனு தாக்கல் செய்ய வந்திருந்தார். டெபாசிட் தொகையான ரூ.25 ஆயிரத்தையும், வெறும் 10 ரூபாய் நாணயங்களாக கொண்டு வந்திருந்தார். இதற்கு பெஞ்சமின் சொல்லும் காரணம் என்ன தெரியுமா? இப்போதெல்லாம் 10 ரூபாய் நாணயங்களை யாருமே வாங்குவதில்லையாம்.. ரிசர்வ் வங்கி பலமுறை சொல்லியும்கூட 10 ரூபாய் நாணயங்களை வாங்க கடைக்காரர்கள் மறுக்கிறார்களாம். அதனால், இந்த நாணயங்களை அனைவரும் வாங்க வேண்டும் என்று விழிப்புணர்வு ஏற்படுத்தவே இவ்வாறு 10 ரூபாய் நாணயங்களுடன் வந்ததாக சொன்னார்.