விரைவில் காஞ்சிபுரத்தில் மிகப்பெரிய புற்று நோய் ஆராய்ச்சி மையம் - அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!

தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது;
இந்தியாவின் முதல் பெண் மருத்துவர் முத்துலட்சுமி ரெட்டியால் துவங்கி வைக்கப்பட்ட அடையாறு புற்றுநோய் மருத்துவமனை பெருமைமிக்க புற்றுநோய் சிகிச்சை தரும் அடையாளமாகத் திகழ்கிறது. குழந்தைப் பருவத்தில் புற்றுநோயைக் கண்டறியும் பணி என்பது தமிழ்நாட்டில் மட்டும் பிரத்யேகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஏற்கனவே புற்றுநோய்க்கான பிரத்யேக அமைப்புகள், கருவிகள் எல்லாம் வழங்கப்பட்டு சிறப்பாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
ரோபோடிக் கருவி மூலம் புற்றுநோய்க்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்தியாவில் எந்த மாநில அரசு மருத்துவமனையிலும் இந்த சிகிச்சை இல்லை. அதன் மூலம் சிகிச்சை பெற்ற 125 பேர் இப்போது குணமடைந்து உள்ளனர். காஞ்சிபுரத்தில் பேரறிஞர் அண்ணாவின் பெயரில் மிகப்பெரிய அளவிலான ஒரு புற்றுநோய் ஆராய்ச்சி மையத்தை உருவாக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
திருப்பத்தூர், ராணிப்பேட்டை, ஈரோடு, கன்னியாகுமாரி ஆகிய மாவட்டங்களில் 12,12,250 பேருக்கு புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டது. அதில் 133 பேருக்கு புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் புற்றுநோய் பரிசோதனை செய்ய 27 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. சிறப்பு மருத்துவர் காலிப்பணியிடங்களை பொறுத்தவரை தமிழ்நாட்டில் 658 காலிப்பணியிடங்கள் உள்ளது.
இந்த காலி பணியிடங்கள் முதலமைச்சரின் வழிகாட்டுதலோடு நிரப்புவதற்கான நடவடிக்கைகள் நடைபெற்று வருகிறது. அதற்கான அரசாணை வர இருக்கிறது. ஒரு மாதத்திற்குள் இந்த பணியிடங்கள் இட ஒதுக்கீடு மூலம் நிரப்பப்படும். 2,553 இளநிலை மருத்துவர்களை நிறப்புவதற்கு தேர்வு நடைபெற்றது. இந்த மாதம் 5ம் தேதி நடைபெற்ற அந்த தேர்வில் 24 ஆயிரம் மருத்துவர்கள் தேர்வு எழுதினார்கள். அந்த வினாத்தாள்களை சரி பார்த்து, வருகின்ற பிப்ரவரி முதல் வாரத்தில் மதிப்பெண்கள் பட்டியல் வெளியாகும்.
இந்த பிப்ரவரி மாதத்தில் ஒட்டுமொத்தமாக தமிழ்நாட்டில் இருக்கும் மருத்துவர்கள் அவர்கள் விரும்பும் இடத்தில் இடம் கிடைத்து மகிழ்ச்சியோடு பணியாற்ற இருக்கிறார்கள்'' என்றார்.
சேலம் அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சையில் உயிரிழப்பு ஏற்பட்டதான குற்றச்சாட்டு குறித்து பதில் அளித்த அமைச்சர், '' தகவல் தெரிந்ததும் அது குறித்து விசாரித்தேன். சலைனில் மாசுபாடு இருக்கலாம் என்று சந்தேகிக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களில் ஒருவர் ஏற்கனவே மோசமான உடல்நிலையில் இருந்துள்ளார். அவர் இறந்துவிட்டார். மற்ற அனைவரும் நிலையாக இருக்கிறார்கள்.
தவறுதலான ஊசி எதுவும் போடவில்லை. சலைனில் மாசுபாடு உள்ளதா என்பதிலும் மருத்துவர்களுக்கு சந்தேகம் உள்ளது. மூன்று சிறப்பு மருத்துவர்களை இதுகுறித்து விசாரிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இன்று தெளிவான விளக்கம் அளிக்கப்படும்'' என்றார்.