கள்ளச்சாராயம் விற்ற நபருக்கு அறிவித்த நிவாரணத்தொகை ரத்து..

 
கள்ளச்சாராயம் - செங்கல்பட்டு


கள்ளச்சாராயம் விற்றதாக கைதான அமாவாசைக்கு அறிவித்த  50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.    

செங்கல்பட்டு மாவட்டம் சித்தாமூர் அடுத்த பெருங்கரணை இருளர் பகுதியில் கள்ளச்சாராயம்  குடித்து  சின்னதம்பி, வசந்தா, வென்னியப்பன், சந்திரா மற்றும் மாரியப்பன் ஆகிய 5 பேர்  உயிரிழந்துள்ளனர். மேலும் கள்ளச்சாராயம் அருந்தியஅஞ்சலை, தம்பு, சங்கர், உள்ளிட்ட 5 பேர் ஆபத்தான நிலையில் மதுராந்தகம் அடுத்த பேரம்பாக்கம் மற்றும் பெருங்கரணை ஆகிய பகுதியை சேர்ந்த சிகிச்சை பெற்றுவந்தனர். இதில்  நேற்று  தம்பு, சங்கர் ஆகியோர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதுதொடர்பாக போலீசார் விசாரணை நடத்தியதில் அதே பகுதியைச் சேர்ந்த அமாவாசை என்பவர் கள்ளச்சாராயம் விற்பனை செய்தது தெரியவந்தது.

செங்கல்பட்டு - கள்ளச்சாராய விவகாரம்

இதனையடுத்து அவரை கைது செய்த போலீஸார், ஏராளமான மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும் கள்ளச் சந்தையில் மது தயாரிப்பதற்காக வைத்திருந்த ரசாயன பவுடரையும்  பறிமுதல் செய்துள்ளனர். இதனிடையே போலீஸிடம் கைதாவதிலிருந்து தப்பிக்க தானும்  கள்ளச்சாராயம் அருந்தியதாதாக கூறி அமாவாசையும் திடீரென மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்ந்துகொண்டார்.

முன்னதாக கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 50,000 நிவராணம் வழங்கப்படும் என அரசு அறிவித்திருந்தது. அந்த பட்டியலில் அமாவாசையின் பெயரும் இடம்பெற்றிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. அண்ணாமலை , எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோரும் கடுமையாக விமர்சித்திருந்தனர்.   இந்நிலையில்  கள்ளச்சாராயம் விற்றதாக கைதான அமாவாசைக்கு அறிவித்த  50 ஆயிரம் ரூபாய் நிவாரணத் தொகை ரத்து செய்யப்பட்டுள்ளது.  கள்ளச்சாராயம் அருந்தி பாதிக்கப்பட்டவராக கருதி அறிவிக்கப்பட்ட நிலையில் அரசு முடிவை மாற்றி அறிவித்துள்ளது.