வாக்காளர் அட்டை தொலைந்துவிட்டால் வாக்களிக்க முடியுமா? முடியாதா? இந்திய தேர்தல் ஆணையம் சொல்வதென்ன..?

 
voter id card

வாக்காளர் அடையாள அட்டையைத் தொலைந்துவிட்டால் வாக்களிக்க முடியுமா? முடியாதா? என்ற கேள்வியை முன்வைத்துள்ளனர். இதற்கு இந்திய தேர்தல் ஆணையம் விரிவான விளக்கத்தை அளித்துள்ளது.

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா?

வாக்காளர் பட்டியலில் உங்கள் பெயர் உள்ளதா? இல்லையா? என்பதை இந்திய தேர்தல் ஆணையத்தின் https://www.eci.gov.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் அறிந்துக் கொள்ளலாம் (அல்லது) 'ECINET' என்ற மொபைல் செயலியின் மூலம் அறிந்துக் கொள்ளலாம்.

வாக்காளர்கள் முதலில் தங்களது ஆண்ட்ராய்டு மொபைலில் 'ECINET' என்ற செயலியைப் பதிவிறக்கம் செய்துக் கொள்ள வேண்டும். பின்னர் அந்த செயலிக்குள் நுழைந்து 'Login' செய்துக் கொள்ள வேண்டும். பிறகு 'Download e-Voter' என்ற ஆப்ஷனை கிளிக் செய்ய வேண்டும். தங்களது வாக்காளர் அட்டையின் எண் மற்றும் மாநிலத்தின் பெயரைக் குறிப்பிட வேண்டும். தொலைபேசி எண்ணுக்கு 'OTP' வரும். அந்த எண்ணை குறிப்பிட்டு 'டிஜிட்டல் வாக்காளர் அட்டையை' பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.

வாக்காளர் எண் தெரியாது?- என்ன செய்வது?

வாக்காளர் அடையாள அட்டை எண் தெரியவில்லை என்றால் 'ECINET' என்ற செயலியில் 'Download e-Voter' என்ற ஆப்ஷனில் 'Search By Details' என்ற ஆப்ஷனுக்குள் சென்று பெயர், பிறந்த தேதி, மாநிலம், மாவட்டம், தொகுதியின் பெயர் போன்ற சுய விவரங்களை குறிப்பிட்டு 'வாக்காளர் எண்' அடையாளம் காணலாம்.

மாற்று ஆவணங்களைக் காண்பித்து வாக்களிக்கலாம்!

வாக்காளர் பட்டியலில் பெயர் உள்ளது. ஆனால் வாக்காளர் அடையாள அட்டை இல்லை. என்ன செய்வது? என்பதற்கான கேள்விக்கு இந்திய தேர்தல் ஆணையம் பதில் அளித்துள்ளது. 12 மாற்று புகைப்பட அடையாள ஆவணங்களில் ஏதேனும் ஒன்றைக் காண்பித்து வாக்களிக்கலாம்.

  1. ஆதார் அடையாள அட்டை,
  2. MNREGA பணி அடையாள அட்டை,
  3. வங்கி/அஞ்சலக கணக்குப் புத்தகம்,
  4. தொழிலாளர் அமைச்சகத்தால் வழங்கப்பட்ட ஆயுஷ்மான் பாரத் மருத்துவ அடையாள அட்டை,
  5. ஓட்டுநர் உரிமம்,
  6. நிரந்தர கணக்கு எண் (PAN Card) அடையாள அட்டை,
  7. NPR -ன் கீழ் RGI-ஆல் வழங்கப்பட்ட திறனட்டை,
  8. இந்திய கடவுச்சீட்டு (Passport),
  9. தமிழ்நாடு அரசால் வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய அடையாள அட்டை,
  10. அரசு/பொதுப்பணித்துறை நிறுவனங்களால் வழங்கப்பட்ட பணி அடையாள அட்டை,
  11. நாடாளுமன்ற/சட்டமன்ற உறுப்பினரின் ஒப்புதலுடன் வழங்கப்பட்ட அடையாள அட்டை,
  12. UDID மாற்றுத்திறனாளி அடையாள அட்டை

மேற்கண்ட ஆவணங்களில் ஏதாவது ஒன்றை காண்பித்து வாக்களிக்கலாம். கூடுதல் விவரங்களுக்கு 1950 என்ற கட்டணமில்லா தொலைபேசி எண்ணை அழைக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.